Sunday, June 7, 2009

எதிர்பார்ப்பு

தரையை துடைத்துக்கொண்டிருந்த பார்வதி கிழவிக்கு வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஈரத்துணியை எரிச்சலுடன் சோப்பு நுரை நிரம்பிய வாளியில் எறியாத குறையாய் வைத்துவிட்டு கதவை நோக்கி குரல் கொடுத்தாள். "யாரு?".

"அம்மா கூரியர்" என்று பதில் வந்ததும், "ஆத்தாடி, இந்த முட்டிவலி வேற" என்று மெதுவாக முனங்கிக்கொண்டே ஒரு கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து கொண்டு "இருங்க வாரேன்" என்றபடியே கதவை நோக்கி போனாள்.

கதவைத் திறந்தவள், "என் மகளும் மருமகனும் கோயிலுக்கு போயிருக்காங்க. உங்களுக்கு யாரு வேணும்? என்றாள். "ஒண்ணுமில்லை பாட்டி, வெளிநாட்டிலிரிந்து லெட்டர் வந்திருக்கு, இத அவங்க வந்தா கொடுத்துடறீங்களா?. நான் போயிட்டு திரும்ப வரணும்னா அரை நாள் எனக்கு வீணாகும்". யாரு சின்னவன் கிட்டயிருந்தா வந்திருக்கு. சந்தோஷத்தில் பூரித்தாள். கொடுங்க தம்பி, என் மககிட்ட நான் கொடுத்துக்கிறேன் என்றதும் இதுல ஒரு கையெழுத்து போடுங்க பாட்டி என்றான். எனக்கு அதெல்லாம் தெரியாது, கொடுங்க வேணும்னா வெரல் வைக்கிறேன் என்றாள். கைநாட்டு வாங்கிக் கொண்டு அவர் நகர, கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

அரைமணி நேரம் கழித்து சுந்தரேசனும், பத்மாவும் உள்ளே வந்தனர். என்ன ஆத்தா வீடு கழுவுநியாக்கும். சும்மாவே உனக்கு முட்டி வலி. அப்புறம் எதுக்கு ஆத்தா செரமப்படுரே என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அவளுடைய மொபைல் சிணுங்கியது. போனில் பேரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.

அய்யா ஷண்முகம் நல்லா இருக்கியா? நாங்க நல்லா இருக்கம்யா. இன்னைக்கு சின்னவன் பொறந்த நாள் இல்லையா? அதான் சாமி பேருல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு இதோ, இப்பதான் வீட்டுக்குள்ளே வந்தோம். இல்லைய்யா தம்பிகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல. நாலு மாசம் ஆச்சுய்யா. நீ எப்பய்யா ஊருக்கு வர்றே?. தோள்பட்டை வலி தேவலையா? உடம்ப பத்திரமா பார்த்துக்கய்யா. அய்யா கொல்லைப்பக்கம் போயிருக்காகய்யா மொகங்கால் கழுவ. நான் சொல்லிக்கிறேன்யா. வைக்கட்டுமாய்யா? போனை வைத்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள்.

சின்னவன் ராசு கிட்டயிருந்து போன் வந்து நாலு மாசம் ஆச்சி. புள்ள எப்படி இருக்கானோ என்ற கவலை அவளை ஆட்க்கொண்டது. மூணு மாசம் முன்னாடி அதே நாட்டுல வேலை பார்க்கும் ஆறுமுகம் ரெண்டாவது தடவையா ரெண்டு மாசம் லீவுல வந்திட்டு போயிருந்தான். அஞ்சு வருஷம் முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னாதான் ஓமன் நாட்டுக்கு வேலைக்கு போனாங்க. போன தடவ வந்திருந்தப்ப தான் ஆறுமாசமா சம்பளம் கொடுக்கல, தங்குறதுக்கு சரியான இடம் கொடுக்கலேன்னு சொல்லி ராசு வேலைப் பார்த்த முதலாளி கம்பெனியிலிரிந்து ஓடிப் போயிட்டான்னும், இப்போ எங்கே இருக்கான்னும் தெரியலேன்னு ஆறுமுகம் சொன்னப்ப ரொம்பவே பயந்து தான் போனாள். இந்த விஷயம் எதுவுமே ராசு அவளிடம் சொன்னதில்லை. அவனிடமிருந்து பணமும் கடுதாசியும் மாதம் தவறாமல் வந்து கொண்டு தான் இருந்தது. ஆறுமுகம் சொல்லும் வரை அவளுக்கும் ஒன்றும் தெரியாதுதான். ஆறுமுகம் புறப்பட்டு போன மூன்றாவது நாள் ராசு போன் பண்ணிய போதுதான் அவள் விவரம் கேட்டாள்.

அவன் வெளியில் பங்களாதேஷ் நாட்டவர்களுடன் தங்கி இருப்பதாகவும் பழைய இரும்பு வியாபாரம் செய்வதோடு கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னான். ரொம்ப கஷ்டம்னா ஊருக்கு வந்திடுய்யா என்று அவள் அழுதாள். இல்ல ஆத்தா முடிஞ்ச அளவுக்கு விசாக்கு கட்டுன பணம் கிடைக்கிற வரைக்குமாவது நான் இங்க இருந்து தான் ஆகணும். நீ தைரியமா இரு ஆத்தான்னு சொல்லிட்டு வச்சிட்டான். கடந்த ரெண்டு வருஷமா காசுபணம் ஒழுங்கா அனுப்பிகிட்டு இருக்கான். இப்பதான் நாலு மாசமா ராசுகிட்ட இருந்து போனும் இல்ல ஒரு கடுதாசியும் இல்ல.

பத்மா! நான் உன் அண்ணனை பார்த்துட்டு சாயந்திரவாக்குல வாரேன் என்ற பார்வதி பாட்டி திடீரென்று நினைவு வந்தவளாக 'தாயி ராசுகிட்ட இருந்து கடுதாசி வந்திருக்கு அந்த ஜன்னல்ல வச்சிருக்கேன் பாரு" என்றபோது ஏன் ஆத்தா இவ்ளோ நேரம் கழிச்சு சொல்றே என்று அவளைக் கடிந்து கொண்டே சந்தோஷத்தில் வேகமாக எடுக்கப் போனபோது கீழே விரித்திருந்த கிழிந்த பாயின் நூல் இடறி விழப் போனாள். பின்னர் சுதாரித்துக் கொண்டு அந்த கடிதத்தை எடுத்து பிரித்து படிக்கத் தொடங்கினாள். கை கால் கழுவி விட்டு உள்ளே வந்த சுந்தரேசனும் அவள் அருகில் அமர, பத்மா அவருக்கும் கேட்கும்படி படித்தாள்.

கடிதத்தில், "அம்மாவுக்கும் அய்யாவுக்கும் ராசு எழுதிக்கொள்வது. இங்கே நான் நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சொகமா இருக்கீயளா. அம்மாயி எப்படி இருக்கு? என்னப்பத்தி கவலைப்பட வேணாம். நான் அடுத்த மாசம் கடைசியில ஊருக்கு வாரதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு எழுதும் முக்கியமான செய்தி என்னன்னா, என்கூட வேலைப்பார்த்த சரவணன் என்ற பையனும் என்கூட வரான். தமிழ்ப் பையன்தான். அவன்தான் நான் வேலையில்லாம இருந்தப்ப அவனோட அறையில தங்கவச்சி சாப்பாடு போட்டது. அதுமட்டுமில்லாம அவன்தான் பணமும் உங்களுக்கு அனுப்பினான். எட்டு வருஷமா ஊருக்கு போகாம இங்கயேதான் இருக்கான். குடும்பத்தோட குஜராத்ல இருந்தாங்க. அஞ்சாறு வருஷம் முன்னாடி நடந்த நிலநடுக்கத்துல அவனோட மொத்த குடும்பமும் இறந்துட்டாங்க. அதுனால ஊருக்கே போகாம இங்கேயே இருக்கான்.

நாலு மாசம் முன்னாடி பழைய இரும்பு பொறுக்குவதற்காக நாட்டோட எல்லைக்கு போனோம். எனக்கு அந்த சமயத்தில உடம்பு சரியில்லாம இருந்ததால என்னை வண்டியிலேயே இருக்கச் சொல்லிட்டு அவன் மட்டும் போனான். அப்போ கீழே கிடந்த ஒரு பொருளை எடுக்க அது பயங்கர சத்ததோட வெடிச்சிடுச்சு. நல்ல வேலை உயிர் போகல. அந்த விபத்துல சரவணனோட ஒரு கையும் ஒரு காலும் ரொம்ப சேதமடைஞ்சு போச்சு. நாலு மாசம் கழிச்சு இப்பதான் கொஞ்சம் தேறி இருக்கான். என்னை அந்த விபத்துல இருந்து காப்பாத்தின அவனை அப்படியே விட்டுட்டு வர மனசு இல்ல. அவனுக்கும் யாரும் இல்ல. அவன் மனசை மாத்தி நான் நம்ம ஊருக்கே கூட்டிகிட்டு வாரேன். அதனால உங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காதுன்னு நினைக்கிறேன். உங்க பதிலை இந்த கடுதாசியில உள்ள நண்பரோட அட்ரசுக்கு உடனே அனுப்பி வைக்கவும். இப்படிக்கு மகன் ராசு".

என்னங்க ராசுக்கு என்ன பதில் எழுதப் போறீங்க. எனக்கு ஒன்னும் புரியலையே. என்ன செய்ய? என்ற பத்மா சுந்தரேசனை கவலையோடு பார்த்தாள். மகன் ஊருக்கு வருவது சந்தோசமாக இருந்தாலும் சரவணன் பற்றிய செய்திகள் அவர்கள் மனதிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. நீ ரொம்ப யோசனை பண்ணி குழம்பாதே. நான் அவனுக்கு பக்குவமா எழுதி அனுப்புறேன் என்றவர், பழைய நோட்டு புத்தகத்திலிரிந்து ரெண்டு தாள்களைக் கிழித்து உடனே எழுதத் தொடங்கினார்.

"அன்புள்ள ராசு, உன்னோட கடுதாசி கெடச்சிது. நீ ஊருக்கு வர்றேன்னு எழுதி இருந்தது ரொம்ப சந்தோசம்யா. சரவணன் செய்தி படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குய்யா. நீ ஊருக்கு கூட்டிகிட்டு வாரேன்னு எழுதி இருந்தே. கஷ்டப்படுற புள்ளைக்கு கண்டிப்பா உதவி செய்யணும். ஆனால் உன் ஆத்தாவ பத்திதான் உனக்கு தெரியுமே. நெஞ்சு வலிக்காரி, அதோட நம்ம வீட்டுல வேற யாரும் இல்ல. பெரியவன் பட்டினத்துலையே இருக்கான். இந்த மாதிரி இருக்கும்போது சரவணன் நிலைமைக்கு அவனோட எல்லா வேலைக்கும் ஒத்தாசையா ஒரு ஆளு கூடவே இருக்கணும். அன்னந்தண்ணி கொடுக்கமட்டுமில்லை, ஒதுக்குபுறமா போகனும்னாலும் துணை இல்லாம முடியாது. அப்படி இருக்குறச்சே நம்ம வீட்டுல சரியா வருமான்னு ரோசனை பண்ணி பாருய்யா. இல்லேன்னா நீ கூட்டிகிட்டு வந்ததுக்கப்புறம் வேற எதாவது தோது பன்னுவம்யா. நம்ம வீட்டுல வச்சி கவனிக்கிறதுங்கறது சரிப்பட்டு வராதுய்யா. மத்த வெவரமெல்லாம் நீ வந்ததுக்கப்புறம் பேசலாம். நீ முதல்ல நல்லபடியா ஊருக்கு வாய்யா. உன்னை எதிர்பார்த்திருக்கும், அம்மாவும், அய்யாவும்.

சரியா பதினஞ்சு நாள் கழிச்சு ஓமன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து தந்தி வந்திருந்தது. "உங்கள் மகன் ராசு விபத்தில் சிக்கி கை கால்களை இழந்துவிட்ட துக்கத்தில் மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய கடிதமும் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவரின் உடலை மற்ற விதிமுறைகள் பூர்த்தியடைந்ததும் உங்கள் ஊருக்கு அனுப்பிவைக்கப்படும்.உங்கள் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்".

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

33 comments:

வேத்தியன் said...

superb...

நட்புடன் ஜமால் said...

வெற்றி கிடைக்க வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

நன்றி வேத்தியன்

S.A. நவாஸுதீன் said...

Blogger நட்புடன் ஜமால் said...

வெற்றி கிடைக்க வாழ்த்துகள்

வா மாப்ள

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்..

Shafi Blogs Here said...

மிக கனத்த சுப்ஜெக்ட்!!மிக இயற்கையான கதாபாத்திரங்கள், வாழ்த்துக்கள்

rose said...

கதைலாம் எழுதுறிங்க வாழ்த்துக்கள் தலைவா

rose said...
This comment has been removed by the author.
rose said...

வாழ்த்துக்கள் தலைவா

அ.மு.செய்யது said...

போட்டியில் வெற்றி பெற‌ ம‌னமார‌ வாழ்த்துக்க‌ள்.

வ‌ட்டார‌ மொழியில் க‌தையோட்ட‌ம் எளிமையாக‌ வ‌ந்திருக்கிற‌து.

மேலும் சீரான‌ வேக‌த்தில் ப‌ய‌ணிக்கிற‌து.இன்னும் கொஞ்ச‌ம் அழுத்த‌ம் இருந்திருக்க‌லாமோ என்றும் தோன்றுகிற‌து.

sakthi said...

மனதை நெகிழச்செய்து விட்ட கதை

வெற்றி பெற வாழ்த்துக்கள்

புதியவன் said...

கதையில் வட்டார மொழியில் உரையாடல்கள்
கதையின் பெரும் பலம்
கதை நகரும் விதமும் அருமை..
நெகிழ்வான முடிவு...

போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் நவாஸுதீன்..

தமிழரசி said...

சரவணன் தான் ராசுவாப்பா... மனங்களின் மொழியை உணர்வு பூர்வமா கொடுத்து இருக்கீங்க நவாஸ்...குடும்பத்தின் மனிதர்களின் எதார்த்த நிலை அப்படியே கோடிட்டு காட்டியிருக்கீங்க....கடைசியில் கண்களில் கண்ணீர் திரை போட்டுவிட்டது.....வெற்றிப் பெற வாழ்த்துக்கள்ப்பா....

அபுஅஃப்ஸர் said...

கதையோட்டம் சூப்பர்

எழுத்தோடம் பேச்சுமுறையிலும், அப்படியே அதனூடே பயணிக்கும்படியாகவும் இருந்தது..

வெளிநாட்டு வாழ் மக்களின் நிலமையையும், அவர்களை பிரிந்து தவிக்கும் பெற்றோர்களின் தவிப்பையும் அழகா செதுக்கிட்டே

முடிவு வித்தியாசம் எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட்

இந்த கதை வெற்றிபெற என் வாழ்த்துக்கள்

Shafi Blogs Here said...

அவசர உலகத்தில் இறப்பையும் அவசரமாக தேடுகிறார்களோ? எதிர்பாரா சோகமான முடிவு. (இது கதையாகவே இருக்கட்டும்)

Suresh said...

உலவில் வைரஸ் நண்பா எனது பதிவை பார்க்கவும் முதலில் அந்த உலவு வோட்டு பட்டையை தூங்குங்க

Suresh said...

நல்ல பதிவு மச்சான் வாழ்த்துகள்

sarathy said...

வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே...

sarathy said...

வெகுநேர்த்தியான பாத்திரப்படைப்பு...

sarathy said...

நம் கண்முன்னே எத்தனை "ராசு"க்கள்?

SUMAZLA/சுமஜ்லா said...

இந்த கதையை, இல்லை இல்லை இதே கரு கொண்ட ஒரு கதையை, வேறெங்கோ எப்பவோ படிச்ச மாதிரி ஒரு ஃபீலிங். அதனால முடிவை சுலபமா கெஸ் பண்ணிவிட்டேன்.

எழுத்து நடை நன்று! படிக்கக் கண்ணு கூசுது கலர்!

coolzkarthi said...

அண்ணே நல்ல கதை...வெற்றி பெற வாழ்த்துக்கள்....

மயாதி said...

இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் கிடைச்சுது....

நமக்கு கதை வாசிக்க மட்டும்தான் தெரியும் கருத்து தெரிவிக்குற அளவுக்கு அறிவு இல்லீங்கோ!
ஆனாலும் எனக்கு நல்லா பிடிச்சிருக்கு ..
வென்று வாருங்கள்

MoHaN said...

வாழ்த்துக்கள்!! கதை நன்று !!!:)!

thevanmayam said...

வெற்றி கிடைக்க வாழ்த்துகள் நவாஸுதீன்..

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்திய அணைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

" உழவன் " " Uzhavan " said...

நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

விமல் said...

//இந்த கதையை, இல்லை இல்லை இதே கரு கொண்ட ஒரு கதையை, வேறெங்கோ எப்பவோ படிச்ச மாதிரி ஒரு ஃபீலிங். அதனால முடிவை சுலபமா கெஸ் பண்ணிவிட்டேன்.//

sme here..

Neverthless it is a very good try and very good story.

S.A. நவாஸுதீன் said...

நன்றி விமல், நன்றி உழவன்

Kalpagam said...

எதிர்பாராத அதிர்ச்சிகரமான முடிவு!
நடை மிகவும் அருமை! வாழ்த்துகள்!

மகனுக்கு இந்த நிலை என்று தெரிந்திருந்தால் அந்தப் பெற்றோர் நிச்சயம் கைவிட்டிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

S.A. நவாஸுதீன் said...

Kalpagam said...

எதிர்பாராத அதிர்ச்சிகரமான முடிவு!
நடை மிகவும் அருமை! வாழ்த்துகள்!

மகனுக்கு இந்த நிலை என்று தெரிந்திருந்தால் அந்தப் பெற்றோர் நிச்சயம் கைவிட்டிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

ரொம்ப நன்றிங்க கல்பகம் (Kalpagam) முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஸாதிகா said...

என் மனதை தொட்டு நெகிழவைத்து விட்டது .இது போல் நிறைய சிறுகதைகளை உங்கள் பிளாக்கில் எதிர் பார்க்கிறேன்.