Sunday, May 24, 2009

என்னைப்பற்றி நானே (தொடர் பதிவு)

இது ஒரு (அன்புச்) சங்கிலித் தொடர்.

நிலாவும் அம்மாவும் தொடங்கி வைத்து, கை நீட்ட அன்போடு கோர்த்துக்கொண்டவர்களின் வரிசையில் நானும்.

என் கையை அன்போடு இழுத்து இணைத்தவர் நண்பர் அ.மு.செ.

இதுவரை இணைந்தவர்கள்
ரவீ
அத்திரி
கடையம் ஆனந்த்
ஹேமா
கார்த்திகைப் பாண்டியன்
குமரை நிலாவன்
சிந்துகா
தேவா
வேத்தியன்
அபு அஃப்ஸர்
அ.மு. செய்யது
தமிழரசி
இராகவன் நைஜீரியா
என் தங்கை காயு

இனி என்னையும் நீங்கள் வாசிக்கலாம்.1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ரொம்பப் பிடிக்கும். இது என் தாயார் அவர்கள் விருப்பப்பட்டு எனக்கு வைத்த பெயர் என்று என் தந்தை சொன்னதால். என்னுடைய முழுப்பெயர் செய்யது அகமது நவாஸுதீன். இதில் செய்யது அகமது - என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) பெயரே எனக்கும். கூடுதலாக நவாஸுதீன்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
ஒவ்வொரு முறையும் விடுப்பில் சென்று குழந்தைளைப் பிரிந்து வரும் போது கண் கலங்குவது உண்டு. கடைசியாக சென்ற ஜூலை மாதம்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சுமாரா இருக்கும். ரொம்ப பிடிக்கும்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
மீன் என்றால் எனக்கு உயிர். மீன்ல என்ன செஞ்சாலும் (மீன் ஆனம், பொரிச்ச மீனு, மீன் புலுக்கல், மீன் 65, இப்டியே போனா லிஸ்ட் பெருசாகும்) ஒரு கட்டு கட்டுவேன். ஆனால் கண்டிப்பா ரசம் வேணும்க எனக்கு. கடைசியா கொஞ்சம் ரசம் ஊத்தி சாப்பிடலேன்னா எனக்கு திருப்தியா இருக்காது.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஆமா. அதனால்தான் சிறு வயது முதலே என் நண்பர்கள் வட்டம் பெரிது. அது இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா, அருவியில் குளிக்க பிடிக்குமா?
உண்மையைச் சொன்னால் எனக்கு ஏரியில் குளிக்கத் தான் ரொம்ப பிடிக்கும். குளத்தில் நீச்சல் அடிக்கவும் ரொம்ப பிடிக்கும். மற்றபடி இவையிரண்டில் என்றால் அருவிதான்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவரின் உடை. பின்னர் அவரின் நடவடிக்கை. ரொம்ப பந்தா பண்ற ஆளான்னு பார்ப்பேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம்: பேசவேண்டிய நேரத்தில் மட்டும்தான் (கொஞ்சம் அதிகமாவே) பேசுவேன்.

பிடிக்காத விஷயம்: என்னுடைய பெரிய வீக்னெஸ் மறதி, இன்னொன்று, சில சமயங்களில் ரொம்ப எதார்த்தமானவன் என்ற நினைப்பில் ஏதாவது செய்யப்போய் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு இது ரொம்ப மாறிவிட்டது.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அன்பு வைப்பதில் அளவு நோக்காதவர்

என்னைப்பற்றி (அவர்களைப் பிரிந்து வெகுதொலைவில் இருப்பதால்) அளவுக்கதிகமாக கவலைப்படுவது. தன்னைப்பற்றி தேவையான அளவுகூட கவலைப்படாதது.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
வேற யாருங்க. என் மனைவி மக்கள்தான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை கைலி, பனியன் மட்டும்தான் (அறையில் ஒய்வு எடுப்பதால்).

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
ராஜ் மியூசிக்ல "ஆத்திச்சூடி ஆத்திச்சூடி". எல்லாம் தமிழ் பற்றுதான் காரணம்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
சிறுவயது முதலே எனக்கு இளநீல நிறம் என்றால் ரொம்பப் பிடிக்கும்.

14. பிடித்த மணம்?
Givenchy – Blue Label - இதன் மனமே அலாதிங்க

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
பாலா - இவரைப்பற்றி சொல்லனும்னா சோழ நாட்டு விஷமம் கொஞ்சம் அதிகம்னு அவரே உண்மையை ஒத்துக்கொள்வார். கடல்புராவான இவர் நல்ல கவிதைப்புராவும் கூட. தரமான கவிதைகள் மட்டுமே தரக்கூடியவர்.
சாரதி - பொறியாளர். சுவாரசியமான பதிவர். அவருடைய வருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம் பதிவைப் (நன்றி அபுஅஃப்ஸர் - அறிமுகம் செய்து வைத்ததற்கு) படித்து இவரைத் தொடர ஆரம்பித்தேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

எதைச் சொல்ல, எதை விட. இவருடைய எல்லா பதிவுகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இவரின் முதல் சந்திப்பு படிக்க காதல் உருவம் பெற்று வந்தால் இவர் மேல் காதல் கொள்ளும். ஷேர் ஆட்டோ படித்த ஷேர் ஆட்டோவும் குலுங்கி குலுங்கி சிரிக்கும். போய்ப் பாருங்க.

17. பிடித்த விளையாட்டு?
Ball Badminton - பள்ளி, கல்லூரியில் அதிகம் விளையாடியது (பள்ளி அணித்தலைவனாக இருந்ததும் உண்டு). கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்.

18. கண்ணாடி அணிபவரா?

வெயில் ஜாஸ்தியா இருக்கும்போது அணிவது உண்டு. அதாங்க Sun Glass.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
முன்பெல்லாம் எந்த புதிய படம் வந்தாலும் ஒரு தடவை பார்த்தே ஆகணும் எனக்கு. இப்ப பிரபலமான நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டும். நண்பர்கள் ரிஸ்க் எடுத்து பார்த்துவிட்டு நல்லா இருக்கு மச்சான்னு கேரன்டீ தரும் படங்கள். "யான் பெற்ற கஷ்டம் பெருக இவ்வையகம்" என்று நண்பர்கள் மாட்டிவிடுவதும் உண்டு. (உதாரணம்: வில்லு).

20. கடைசியாகப் பார்த்த படம்?
அயன் தான் கடைசியா பார்த்த புதிய தமிழ் திரைப்படம். பழைய படங்கள்னு பார்த்தா திருமலை. திரை அரங்கில் தசாவதாரம்.

21. பிடித்த பருவ காலம் எது?
நாட்டில் மழைக்காலம். அந்த சமயத்தில் நல்ல மழை பெய்யும்போது மல்லிகைப்பூ போன்ற சூடான சோறும், தேங்காய்ப்பால் ரசமும், கருவாடு பொரியலும், அதுதான் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அமிர்தம். இங்கு மழை பெய்தால் பயம். Traffic Jam. ரோட்டில் போக முடியாது.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இண்டர்நெட்ல மேயுரதோட சரிங்க. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போ இல்லை. கல்லூரியில் படிக்கும்போது பாலகுமாரனின் ரசிகன் (எனக்கு பாலகுமாரனை அறிமுகப் படுத்தியது நம்ம நட்புடன் ஜமால் தாங்க) நான்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
என் குழந்தைகளின் அடுத்த புதிய போட்டோக்கள் வரும் வரை

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் - தொலைபேசியில் என் பிள்ளைகளின் பேச்சு.
பிடிக்காத சத்தம் - அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் வரும் பீப் சத்தம் (Call waiting from Office).


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
உயரம் - 36,000 அடி (வானூர்தியில் பறந்தபோது)
நீளம் - அதிரையிலிருந்து ஜித்தாஹ். (சரியான தொலைவின் அளவு எனக்கு தெரியல. தெரிஞ்சவங்க சொன்னா என்னோட பொது அறிவை கொஞ்சம் வளர்த்துக்குவேன்)


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தெரியலேங்க. தேடிகிட்டு இருக்கேன்.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கண்களில் நான் உண்மையை வாசித்துக்கொண்டிருக்கும்போது உதடுகளில் பொய் உதிர்ப்பவர்களை.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்தான். அதனால் பல விசயங்களில் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். (இப்பக்கூட பாருங்க எனக்குள்ள இருக்கும் கோபம் மேல் கோபம் கோபமாக வருகிறது).

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
குற்றாலம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால். அதிலும் என் மகள் சிலிர்த்துக்கொண்டும் நடுங்கிக்கொண்டும் என் கால்களை இருக்கிப் பிடித்தவன்னம் முகத்தில் விழுந்துகொண்டிருக்கும் நீரை துடைக்க முயற்சி செய்துகொண்டு அருவியில் குளிப்பதை பார்க்கும்போது நான் குளிப்பதை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருப்பேன். அது ஒரு அலாதி சுகம் எனக்கு.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எங்க அப்பா (வாப்பா) மாதிரி. என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாய்.

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?
விடுப்பில் ஊருக்கு செல்லும்போது என் பிள்ளைகளுக்கு என் கையால் உணவு ஊட்ட. (இல்லன்ன சும்மா கோவப்படுவாங்க, வாப்பாவ பாரு, பிராக்கு பார்க்காமல் ஒழுங்கா சாப்பிடுங்க, சாப்பிடும்போது தண்ணி குடிக்காத, கீழ கொட்டாமல் வாய ஒழுங்கா மூடுங்க - இப்படி ஏதாவது என் பிள்ளைங்கல சொல்லிக்கிட்டு இருப்பாங்க)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நான் என் மனைவியின் இரண்டு பிரசவங்களின் போதும் பத்து நாட்களுக்கு முன்பே யாருக்கும் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியதும், கதவு திறந்தபோது என் மனைவியின் முகத்தில் கண்ட அந்த உணர்ச்சிகளின் கலவை இருக்கின்றதே, அதுதாங்க எனக்கு வாழ்க்கை. "குடும்பத்தாரை சந்தோசமாக வைத்திருங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்". ஏன் என்றால் வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் பலனடையப் பாப்போம்.

என்னைத்தொடர்ந்து நான் உரிமையோடு வம்புக்கு பிடித்து இழுக்கும் கைகள்

பாலா

சாரதி

Sunday, May 17, 2009

தைரியம்தேசியக்கல்லூரி.

மாணவர்கள் சிலர் வகுப்பறைக்கும் பலர் கேன்டீனுக்கும் சென்றுகொண்டிருந்த நேரம். அதிகாலைப் பெய்த கனத்த மழையின் மிச்சங்களாய் இன்னமும் காற்று சில்லென்று இருந்தது.

ரமேஷும் பாலாவும் கேண்டீனை விட்டு வெளியில் வந்தனர். "சொன்னதெல்லாம் புரிஞ்சுதுல்ல, சொதப்பாம பேசு மச்சான்" என்றான் பாலா. "டேய், வேணாம் மச்சான். பயமா இருக்குடா". கலவரத்தோடு சொன்னான் ரமேஷ். "ஒன்னும் கவலைப்படாதே. தைரியமா போடா. நீ எதுவும் பண்ண வேணாம். ஒரு அஞ்சு நிமிஷம் ரியா கிட்ட பேசு. போதும்" இது பாலா.

"இல்லடா, ரொம்ப கஷ்டம்டா. என்னால முடியும்னு எனக்கு தோணல"". என்றவாறே கைக்குட்டையால் முகம் துடைத்தான் ரமேஷ்.

ரமேஷும் பாலாவும் தொடக்கப்பள்ளி முதல் ஒன்றாக பயின்று வருபவர்கள். பள்ளியில் தோழர்களாய், +2-வில் நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள், கல்லூரி சென்றதும் உற்ற நண்பர்களாய் ஆனார்கள். எவருக்காகவும், எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காதவர்கள்.

"மச்சான், இங்கே பார், நான் உன்னை அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லவில்லை. ஒரு அஞ்சு நிமிஷம் பேசு, அது போதும். எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால முடியும். போ. உன்ன ஒன்னும் கடிச்சு தின்னப் போறதில்ல அவள்". பாலா அவனை உற்சாகப்படுத்தினான்.

"மச்சான், ஒருவேளை அவள்" என்று ரமேஷ் இழுக்க, "ஒன்னும் இல்ல, ரெண்டும் இல்ல. ஜஸ்ட் போயி பேசு." என்று பாலா சொல்ல, ஒரு வழியாக ரியாவை நோக்கி தயங்கி தயங்கி நடக்கத் தொடங்கினான். அவள் அருகில் சென்றதும் பாலாவைத் மீண்டும் ஒருமுறைத் திரும்பிப் பார்த்தான். அவன் "தைரியமா போடா" என்று காற்றில் சைகை செய்தான். பாலாவும் ரமேஷின் பயத்தை பார்த்து லேசாக கொஞ்சம் கலங்கத்தான் செய்தான்.

கேன்டீனின் எதிரே இருந்த சிமெண்ட் பெஞ்சில் ரியா அமர்ந்து இருந்தாள். தன்னுடைய கைப்பையில் எதையோ தேடி அது இருப்பது கண்டதும் திருப்தி அடைந்து முகம் மலர, ரமேஷ் அவள் முன்னே சென்று நின்றான்.

ரியா, மொத்த கல்லூரியே அவள் பின்னால் சுற்றும் அளவிற்கு பேரழகி இல்லையென்றாலும், அவள் வகுப்பில் அவள்தான் கூடுதல் மதிப்பெண் பெற்றவள், மதிப்பிட்டவர்கள் மாணவர்கள் என்று சொல்லத் தேவையில்லை. எல்லோரோடும் இனிமையாகப் பேசுவாள்.

ரமேஷ் அவள் அருகில் சென்றதும், இருவரும் பேசிக்கொண்டதும், முதலில் அவள் முகத்தில் ஏற்பட்ட கலவரம், பின்னர் இருவரும் சாதரணமாகப் பேசிக்கொண்டது அனைத்தையும் தூரத்தில் இருந்து பாலா பார்த்துக்கொண்டிருந்தான். "என்ன பாலா கிளாசுக்கு போகல?" H.O.D. கேட்டுக்கொண்டே அவனைக்கடந்து போனபோது காதில் விழுந்தாலும் கவனம் இல்லை. அவனது கவனம் எல்லாம் செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பரபரப்பான பதினைந்து நிமிடங்கள். அதோ சிரித்துக்கொண்டே இருவரும் எழுந்து விட்டனர். இருவரும் விடைபெற்று ரமேஷ் பாலாவை நோக்கி வந்தான். பாலாவால் இருப்பு கொள்ள முடியவில்லை. என்னடா ஓகேயா? என்று கேட்டுக் கொண்டே அவனை சந்தோஷத்தில் கட்டிப் பிடித்தான். சொல்லு மச்சான். என்ன ஆச்சு?.

நான் அவகிட்டே சொல்லிட்டேன் மச்சான். திடீர்னு சொன்னதும் முதல்ல கொஞ்சம் மிரண்டா. அப்புறம் முகம் வெக்கத்துல சிவக்க ஆரம்பிச்சது. அவளுக்குள்ளும் காதல் இருக்குடா. ஆனால் ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லிட்டா மச்சான்.

என்னடா சொன்னாள்?

தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லுன்னு வெக்கப்பட்டுகிட்டே சொன்னாடா. இப்போ தைரியமா போய் சொல்லு மச்சான் என்றான் ரமேஷ் பாலாவிடம்.

Monday, May 11, 2009

அதிர்ஷ்டம்அதிகாலை 6 மணி, அரை எண் 13, சாவித்ரி சேரில் அமர்ந்தபடி மேஜையின் மேல் ஒருகை நீட்டி மற்றொரு கையை அதன் மேல் மடித்து தலையனையாக்கி அரை உறக்கத்தில் இருந்தாள்.

சாரதா ஆயா தரை முழுவதும் டெட்டால் கலந்த நீரால் துடைத்து விட்டு சென்று இருந்தாள். அதனால் ஆஸ்பத்திரி வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.

அடுத்த அறை வாசலில் யாரோ ஒரு சிறுவன் கையில் சில்வர் தூக்குடன் தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் "அம்மா காப்பி வாங்கவா? டீ வாங்கவா?. அவன் அம்மா எதுவோ சொல்லி இருக்க வேண்டும். சில்லறையை பத்திரமா வாங்கிட்டு வாடா என்று சொன்னது மட்டும் கொஞ்சம் சத்தமாக காதில் விழுந்தது.

பெட்டில் வாசுதேவன் உறக்கத்தில் இருந்தான். உறக்கத்தில் என்று சொல்வதை விட உணர்வற்று கிடந்தான். ஏழு மாதங்கள் ஆகிவிட்டது இந்த மருத்துவமனையில் அனுமதித்து. "கோமா". அவளைத் தவிர வேறு யாரும் அவனுடன் இல்லை. இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. அவன் நன்றாக இருந்தபோது ஆடிய ஆட்டம் அப்படி

நேற்று முன்தினம்தான் ஜெர்மனியில் இருந்து வந்த டாக்டர் உத்தரவாதம் கொடுத்து இருந்தார்.

கையில் ட்ரேயுடன் ஹெட் நர்ஸ் உள்ளே வந்தாள். சாவித்ரி இரவு முழுவதும் விழிப்பதும் உறங்குவதுமாய் இருந்தவள் அதிகாலையில் கொஞ்சம் கண் அயர்ந்து விட்டாள். பளிச்சென்று இருந்த நர்ஸ் தேவி, "என்னக்கா! இராத்திரி முழுவதும் தூங்கலையா? இராத்திரி ஏதாவது அசைவு தெரிந்ததா? என்று கேட்டாள்.

"இல்ல தேவி. ஒரு முறை கை அசைந்தது போல் இருந்தது. அது என்னோட பிரம்மையா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு" என்றாள்.
கவலைப்படாதீங்க அக்கா. அதான் சீப் டாக்டர் சொல்லிட்டாருல்ல, இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ள அவருக்கு நினைவு வந்துரும். ஏழு மாசமா நீங்க அவர்கூடவே இருக்கீங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்தானே. எல்லாம் சரியாகும். தைரியமா இருங்க.

தேவி சந்திரனின், தினமும் எடுக்கும் பல்ஸ், இரத்தகொதிப்பின் அளவு, எல்லாம் குறித்த பிறகு "நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வாரேன் அக்கா' என்று சொல்லிவிட்டு அடுத்த அறையை நோக்கி போனாள்.

தெர்மாசில் இருந்த காப்பியை கொஞ்சம் கப்பில் ஊற்றி ஜன்னல் வழியாக வெளியில் நோக்கினாள். ஆட்டோவில் யாரையோ கைப்பிடித்து உள்ளே ஒருவர் அமர்த்த, அதன் பின் அவரும் அமர ஆட்டோ நகரத்தொடங்கியது. யாரோ டிஸ்சார்ஜ் ஆகி போகின்றார். ஒரு சிறு பெருமூச்சு அவளுக்கும் வெளிப்பட்டது.

திடீரென அவள் சேலைத் தலைப்பை யாரோ இழுப்பது போல் இருக்க திரும்பியவள் சந்தோஷத்தில் அதிர்ந்து தான் போனாள். வாசுதான்! கண்களில் ஆறுபோல் நீர் வழிய ஏக்கத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் சந்தோஷத்தில் டாக்டரை அழைக்க அவன் கையை அசைத்து அவளை அருகில் அழைத்தான்.

மெல்ல அவன் கையை பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகை செய்தனர்.

வாசுவின் குரல் தளுதளுத்தது. "சாவித்ரி, நீ என்னோட வாழ்க்கைல எல்லா துக்கத்திலும் கூடவே இருந்திருக்க. என்னோட பாக்டரி தீப்பிடிச்சி எரிஞ்சு சாம்பல் ஆனப்போ நீ மட்டும் தான் கூட இருந்த. என்னோட தொழில்ல நஷ்டம் ஏற்பட்டப்போ நீ மட்டும்தான் எனக்கு ஆறுதலா இருந்தே. என்னோட தொழில் போட்டியினால் என் எதிரி என்னை சுட்டபோதும் கூட இருந்தது நீதான். என் வீடு, கார், வசதி அனைத்தையும் இழந்தபோதும் கடைசி வரைக்கும் கூட இருந்த தேவதை நீ. கடைசியா என் உடல்நிலை மோசமானபோதும் உன்னைத்தவிர வேறு யாரும் என்னுடன் இல்லை."

சாவித்ரி "அதெல்லாம் எதுக்கு இப்போ, விடுங்க, இப்போ நீங்க மீண்டு வந்ததே போதும்" என்றபோது சந்தோசம் பொங்கியது அவளுக்கு."இல்லை சாவித்ரி விஷயம் இருக்கு, இவ்வளவு விசயமும் நடந்தது நீ கூட இருக்கும்போது தான், I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.டிஸ்கி: முதல் முயற்சி, கொஞ்சமா நக்கல் அடிங்கப்பா!

Monday, May 4, 2009

நண்பா - நீ விரைந்து நலம் பெற வேண்டிக்கொள்கிறோம்
நம் நண்பர் (என் உயிரே) அபுஅப்ஸர் சில மாதங்களாக சைனஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு
வருகிறார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதால் அவர் பூரண குணமடைந்து விரைவில் நம்முடன் இணைய நண்பர்கள் அனைவரையும் பிரார்த்திக்க வேண்டிக்கொள்கிறேன்.


நண்பா - நீ விரைந்து நலம் பெற வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்