Sunday, June 21, 2009

ரெண்டுக்கு - நான், மத்ததுக்கு - நீங்க

இந்த படையை பார்த்தால் பாம்பே நடுங்கும்


இதுக்குத்தான் ரொம்ப தலைக்கனம் கூடாதுங்கறதுஎல்லா படத்துக்கும் உங்க வித்தியாசமான கமெண்ட்ஸையும் பின்னூட்டத்தில் போடுங்களேன்
அப்படியே உங்க பொன்னான ஓட்டையும் போட்டுட்டு போங்க

Thursday, June 11, 2009

ஏதோ உங்ககிட்ட சொல்லனும்னு தோணிச்சு

வழக்கம்போல் மனசில்லாமல் எழுந்து, தயாராகி அலுவலகம் செல்ல காரில் அமரும்போதே மனதில் ஏதோ ஒரு குழப்பம். இரவு கண்ட கனவின் பாதிப்பு. என்ன கனவு என்பது அறவே நினைவில் இல்லை. ஆனால் அதனுடைய பாதிப்பை மனதளவில் உணர முடிந்தது.

நேற்று இரவு உறங்கப்போகும் வரை மனதில் எந்த குழப்பமும் இல்லை. மாறாக உறங்கும்முன் என் மகளிடம் பேசியதும், அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதையும் நினைத்து (வாப்பா, தம்பிக்குத்தான் சிலேட்டுல எழுதவே தெரியலையே அப்புறம் ஏன் உம்மா அவனை ஸ்கூலுக்கு அனுப்புது?) புன்முருவலோடுதான் உறங்கப்போனேன்.

விழித்த பிறகு தான் இந்த மனநிலை. அறையில் எதையோ தவற விட்டதைப்போல. மொபைல், பர்ஸ், அதன் உள்ளே அடையாள அட்டை, எல்லாம் சரிபார்த்தேன். சரியாக இருக்கிறது. வேறு என்னவாக இருக்கும், சட்டென்று நினைவில் வராததால் மீண்டும் மாடியேறிச் செல்ல எரிச்சலாக இருந்ததாலும் டிரைவரை வண்டியை எடுக்கச் சொன்னேன்.

நான்கு சிக்னல் தான் கடக்கவேண்டும். காலை நேரத்தில் அதிகம் டிராபிக் இருப்பதால் அலுவலகத்தை அடைய இருபது நிமிடங்கள் எடுக்கும். முதல் சிக்னலில் வண்டியை நிறுத்தியபோது என் கண்கள் அந்த சிறுவனைத் தேடின. இன்று அவனைக் காணவில்லை.

அவன், ஏதோ ஒரு ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவன் என்பது அவனைப் பார்த்தாலே தெரியும். நல்ல கருத்த நிறத்தில், மிகவும் மெலிந்த தேகத்துடன் அதிக அழுக்குடன் இருப்பான். இரண்டு கைகளும் அவனுக்கு முழங்கை வரை மட்டும்தான். கழுத்தில் மாட்டிய பிளாஸ்டிக் பை, அதில் கொஞ்சம் ஒரு ரியால் நோட்டுக்கள், எப்போதும் முகத்தில் ஒரு சோகம். கொளுத்தும் வெயிலில், சிக்னலில் வண்டிகள் நிற்கும்போது கார் கண்ணாடியை தட்டி காசு கேட்க்கும் அவனை இன்று காணவில்லை. சட்டைப் பாக்கெட்டில் அவனுக்காக எடுத்து வைத்த ரியாலுக்கு இன்று வேலையில்லை. என்னுடைய குஜராத்தி டிரைவரிடம் நான் "எங்க அலிபாய் இன்னைக்கு பையனைக் காணோம்?' என்றேன். "ஒருவேளை இங்கு கலெக்சன் கம்மியா இருந்திருக்கும், வேறு எங்காவது கொண்டுபோய் விட்டிருப்பார்கள்" ரொம்ப சாதரணமாக சொன்னார்.

என்ன பாய் சொல்றீங்க, விட்டுருப்பாங்களா? அப்படின்னா? அப்போது தான் அவர் எனக்கு விளக்கினார். இது ஒரு பெரிய நெட்வொர்க் என்றும், தினமும் இது போன்ற சிறுவர்களை ஒவ்வொரு சிக்னலிலும் காலையில் இறக்கி விடுவதும், மாலையில் அவர்களை வந்து அழைத்துச் செல்வதும் வழமை என்றார். அவர் பலமுறை அதை தானே பார்த்ததாகவும் சொன்னார். அந்த சிறுவனின் உருவம் என் கண் முன்னே வந்து சென்றது. அவன் பிறக்கும் வரை அவள் தாய் அவனை வயிற்றில் சுமந்தபடி என்னென்ன அவஸ்தைகள் அடைந்திருப்பாள். அவளுக்கு இப்போது தெரியுமோ தெரியாதோ அல்லது அவளும் இதில் உடந்தையா, அவனது கைகள் இரண்டும் இயற்கையிலேயே அப்படித்தானா அல்லது நினைக்கவே பயமாக இருந்தது.

ஏற்கனவே உள்ள குழப்பம் போதாதென்று இன்று இதுவேறு என்னைக் குடையத் துவங்கியது.

Sunday, June 7, 2009

எதிர்பார்ப்பு

தரையை துடைத்துக்கொண்டிருந்த பார்வதி கிழவிக்கு வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஈரத்துணியை எரிச்சலுடன் சோப்பு நுரை நிரம்பிய வாளியில் எறியாத குறையாய் வைத்துவிட்டு கதவை நோக்கி குரல் கொடுத்தாள். "யாரு?".

"அம்மா கூரியர்" என்று பதில் வந்ததும், "ஆத்தாடி, இந்த முட்டிவலி வேற" என்று மெதுவாக முனங்கிக்கொண்டே ஒரு கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து கொண்டு "இருங்க வாரேன்" என்றபடியே கதவை நோக்கி போனாள்.

கதவைத் திறந்தவள், "என் மகளும் மருமகனும் கோயிலுக்கு போயிருக்காங்க. உங்களுக்கு யாரு வேணும்? என்றாள். "ஒண்ணுமில்லை பாட்டி, வெளிநாட்டிலிரிந்து லெட்டர் வந்திருக்கு, இத அவங்க வந்தா கொடுத்துடறீங்களா?. நான் போயிட்டு திரும்ப வரணும்னா அரை நாள் எனக்கு வீணாகும்". யாரு சின்னவன் கிட்டயிருந்தா வந்திருக்கு. சந்தோஷத்தில் பூரித்தாள். கொடுங்க தம்பி, என் மககிட்ட நான் கொடுத்துக்கிறேன் என்றதும் இதுல ஒரு கையெழுத்து போடுங்க பாட்டி என்றான். எனக்கு அதெல்லாம் தெரியாது, கொடுங்க வேணும்னா வெரல் வைக்கிறேன் என்றாள். கைநாட்டு வாங்கிக் கொண்டு அவர் நகர, கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

அரைமணி நேரம் கழித்து சுந்தரேசனும், பத்மாவும் உள்ளே வந்தனர். என்ன ஆத்தா வீடு கழுவுநியாக்கும். சும்மாவே உனக்கு முட்டி வலி. அப்புறம் எதுக்கு ஆத்தா செரமப்படுரே என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அவளுடைய மொபைல் சிணுங்கியது. போனில் பேரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.

அய்யா ஷண்முகம் நல்லா இருக்கியா? நாங்க நல்லா இருக்கம்யா. இன்னைக்கு சின்னவன் பொறந்த நாள் இல்லையா? அதான் சாமி பேருல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு இதோ, இப்பதான் வீட்டுக்குள்ளே வந்தோம். இல்லைய்யா தம்பிகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல. நாலு மாசம் ஆச்சுய்யா. நீ எப்பய்யா ஊருக்கு வர்றே?. தோள்பட்டை வலி தேவலையா? உடம்ப பத்திரமா பார்த்துக்கய்யா. அய்யா கொல்லைப்பக்கம் போயிருக்காகய்யா மொகங்கால் கழுவ. நான் சொல்லிக்கிறேன்யா. வைக்கட்டுமாய்யா? போனை வைத்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள்.

சின்னவன் ராசு கிட்டயிருந்து போன் வந்து நாலு மாசம் ஆச்சி. புள்ள எப்படி இருக்கானோ என்ற கவலை அவளை ஆட்க்கொண்டது. மூணு மாசம் முன்னாடி அதே நாட்டுல வேலை பார்க்கும் ஆறுமுகம் ரெண்டாவது தடவையா ரெண்டு மாசம் லீவுல வந்திட்டு போயிருந்தான். அஞ்சு வருஷம் முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னாதான் ஓமன் நாட்டுக்கு வேலைக்கு போனாங்க. போன தடவ வந்திருந்தப்ப தான் ஆறுமாசமா சம்பளம் கொடுக்கல, தங்குறதுக்கு சரியான இடம் கொடுக்கலேன்னு சொல்லி ராசு வேலைப் பார்த்த முதலாளி கம்பெனியிலிரிந்து ஓடிப் போயிட்டான்னும், இப்போ எங்கே இருக்கான்னும் தெரியலேன்னு ஆறுமுகம் சொன்னப்ப ரொம்பவே பயந்து தான் போனாள். இந்த விஷயம் எதுவுமே ராசு அவளிடம் சொன்னதில்லை. அவனிடமிருந்து பணமும் கடுதாசியும் மாதம் தவறாமல் வந்து கொண்டு தான் இருந்தது. ஆறுமுகம் சொல்லும் வரை அவளுக்கும் ஒன்றும் தெரியாதுதான். ஆறுமுகம் புறப்பட்டு போன மூன்றாவது நாள் ராசு போன் பண்ணிய போதுதான் அவள் விவரம் கேட்டாள்.

அவன் வெளியில் பங்களாதேஷ் நாட்டவர்களுடன் தங்கி இருப்பதாகவும் பழைய இரும்பு வியாபாரம் செய்வதோடு கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னான். ரொம்ப கஷ்டம்னா ஊருக்கு வந்திடுய்யா என்று அவள் அழுதாள். இல்ல ஆத்தா முடிஞ்ச அளவுக்கு விசாக்கு கட்டுன பணம் கிடைக்கிற வரைக்குமாவது நான் இங்க இருந்து தான் ஆகணும். நீ தைரியமா இரு ஆத்தான்னு சொல்லிட்டு வச்சிட்டான். கடந்த ரெண்டு வருஷமா காசுபணம் ஒழுங்கா அனுப்பிகிட்டு இருக்கான். இப்பதான் நாலு மாசமா ராசுகிட்ட இருந்து போனும் இல்ல ஒரு கடுதாசியும் இல்ல.

பத்மா! நான் உன் அண்ணனை பார்த்துட்டு சாயந்திரவாக்குல வாரேன் என்ற பார்வதி பாட்டி திடீரென்று நினைவு வந்தவளாக 'தாயி ராசுகிட்ட இருந்து கடுதாசி வந்திருக்கு அந்த ஜன்னல்ல வச்சிருக்கேன் பாரு" என்றபோது ஏன் ஆத்தா இவ்ளோ நேரம் கழிச்சு சொல்றே என்று அவளைக் கடிந்து கொண்டே சந்தோஷத்தில் வேகமாக எடுக்கப் போனபோது கீழே விரித்திருந்த கிழிந்த பாயின் நூல் இடறி விழப் போனாள். பின்னர் சுதாரித்துக் கொண்டு அந்த கடிதத்தை எடுத்து பிரித்து படிக்கத் தொடங்கினாள். கை கால் கழுவி விட்டு உள்ளே வந்த சுந்தரேசனும் அவள் அருகில் அமர, பத்மா அவருக்கும் கேட்கும்படி படித்தாள்.

கடிதத்தில், "அம்மாவுக்கும் அய்யாவுக்கும் ராசு எழுதிக்கொள்வது. இங்கே நான் நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சொகமா இருக்கீயளா. அம்மாயி எப்படி இருக்கு? என்னப்பத்தி கவலைப்பட வேணாம். நான் அடுத்த மாசம் கடைசியில ஊருக்கு வாரதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு எழுதும் முக்கியமான செய்தி என்னன்னா, என்கூட வேலைப்பார்த்த சரவணன் என்ற பையனும் என்கூட வரான். தமிழ்ப் பையன்தான். அவன்தான் நான் வேலையில்லாம இருந்தப்ப அவனோட அறையில தங்கவச்சி சாப்பாடு போட்டது. அதுமட்டுமில்லாம அவன்தான் பணமும் உங்களுக்கு அனுப்பினான். எட்டு வருஷமா ஊருக்கு போகாம இங்கயேதான் இருக்கான். குடும்பத்தோட குஜராத்ல இருந்தாங்க. அஞ்சாறு வருஷம் முன்னாடி நடந்த நிலநடுக்கத்துல அவனோட மொத்த குடும்பமும் இறந்துட்டாங்க. அதுனால ஊருக்கே போகாம இங்கேயே இருக்கான்.

நாலு மாசம் முன்னாடி பழைய இரும்பு பொறுக்குவதற்காக நாட்டோட எல்லைக்கு போனோம். எனக்கு அந்த சமயத்தில உடம்பு சரியில்லாம இருந்ததால என்னை வண்டியிலேயே இருக்கச் சொல்லிட்டு அவன் மட்டும் போனான். அப்போ கீழே கிடந்த ஒரு பொருளை எடுக்க அது பயங்கர சத்ததோட வெடிச்சிடுச்சு. நல்ல வேலை உயிர் போகல. அந்த விபத்துல சரவணனோட ஒரு கையும் ஒரு காலும் ரொம்ப சேதமடைஞ்சு போச்சு. நாலு மாசம் கழிச்சு இப்பதான் கொஞ்சம் தேறி இருக்கான். என்னை அந்த விபத்துல இருந்து காப்பாத்தின அவனை அப்படியே விட்டுட்டு வர மனசு இல்ல. அவனுக்கும் யாரும் இல்ல. அவன் மனசை மாத்தி நான் நம்ம ஊருக்கே கூட்டிகிட்டு வாரேன். அதனால உங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காதுன்னு நினைக்கிறேன். உங்க பதிலை இந்த கடுதாசியில உள்ள நண்பரோட அட்ரசுக்கு உடனே அனுப்பி வைக்கவும். இப்படிக்கு மகன் ராசு".

என்னங்க ராசுக்கு என்ன பதில் எழுதப் போறீங்க. எனக்கு ஒன்னும் புரியலையே. என்ன செய்ய? என்ற பத்மா சுந்தரேசனை கவலையோடு பார்த்தாள். மகன் ஊருக்கு வருவது சந்தோசமாக இருந்தாலும் சரவணன் பற்றிய செய்திகள் அவர்கள் மனதிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. நீ ரொம்ப யோசனை பண்ணி குழம்பாதே. நான் அவனுக்கு பக்குவமா எழுதி அனுப்புறேன் என்றவர், பழைய நோட்டு புத்தகத்திலிரிந்து ரெண்டு தாள்களைக் கிழித்து உடனே எழுதத் தொடங்கினார்.

"அன்புள்ள ராசு, உன்னோட கடுதாசி கெடச்சிது. நீ ஊருக்கு வர்றேன்னு எழுதி இருந்தது ரொம்ப சந்தோசம்யா. சரவணன் செய்தி படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குய்யா. நீ ஊருக்கு கூட்டிகிட்டு வாரேன்னு எழுதி இருந்தே. கஷ்டப்படுற புள்ளைக்கு கண்டிப்பா உதவி செய்யணும். ஆனால் உன் ஆத்தாவ பத்திதான் உனக்கு தெரியுமே. நெஞ்சு வலிக்காரி, அதோட நம்ம வீட்டுல வேற யாரும் இல்ல. பெரியவன் பட்டினத்துலையே இருக்கான். இந்த மாதிரி இருக்கும்போது சரவணன் நிலைமைக்கு அவனோட எல்லா வேலைக்கும் ஒத்தாசையா ஒரு ஆளு கூடவே இருக்கணும். அன்னந்தண்ணி கொடுக்கமட்டுமில்லை, ஒதுக்குபுறமா போகனும்னாலும் துணை இல்லாம முடியாது. அப்படி இருக்குறச்சே நம்ம வீட்டுல சரியா வருமான்னு ரோசனை பண்ணி பாருய்யா. இல்லேன்னா நீ கூட்டிகிட்டு வந்ததுக்கப்புறம் வேற எதாவது தோது பன்னுவம்யா. நம்ம வீட்டுல வச்சி கவனிக்கிறதுங்கறது சரிப்பட்டு வராதுய்யா. மத்த வெவரமெல்லாம் நீ வந்ததுக்கப்புறம் பேசலாம். நீ முதல்ல நல்லபடியா ஊருக்கு வாய்யா. உன்னை எதிர்பார்த்திருக்கும், அம்மாவும், அய்யாவும்.

சரியா பதினஞ்சு நாள் கழிச்சு ஓமன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து தந்தி வந்திருந்தது. "உங்கள் மகன் ராசு விபத்தில் சிக்கி கை கால்களை இழந்துவிட்ட துக்கத்தில் மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய கடிதமும் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவரின் உடலை மற்ற விதிமுறைகள் பூர்த்தியடைந்ததும் உங்கள் ஊருக்கு அனுப்பிவைக்கப்படும்.உங்கள் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்".

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது