Lilypie

Wednesday, April 29, 2009

+2 வாழ்க்கை - மலரும் நினைவுகள். (பகுதி-2)

மலரும் நினைவுகள். (பகுதி-2)

எங்கள் பள்ளியின் சீருடை (வெள்ளை சட்டையும், காப்பி நிற (அதாங்க நம்ம போஸ்ட்மேன் போடுறது) முழுக்கால் சட்டையும்). இந்த நிறம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லியும் பள்ளி நிர்வாகம் கேட்காததால், வேறு வழியின்றி போடுவோம். வீட்டிலிரிந்து கிளம்பும்போது கைலியுடன் கிளம்புவோம். கால்சட்டை சைக்கிளின் பின்புறம் கேரியரில் இருக்கும். வகுப்பு சென்று தான் பேன்ட் போடுவோம். அவ்ளோ வெக்கம்னா பார்த்துங்களேன்.

வகுப்பு தொடங்கும் முன்னரே எங்கள் அரட்டை தொடங்கும். அது வகுப்பு நடக்கும்போதும் தொடரும். மாணவர்கள் பதினெட்டு பேர் கொண்ட எங்கள் வகுப்பில் மாணவிகள் வெறும் எட்டு பேர்தான் (பெண் சிசுக்கொலையை இங்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன்). இருந்தாலும் அது எங்களுக்கு ஒரு பெரிய விஷயம் கிடையாது. எங்கள் குழுவே வேறு. நான்கு பேர் (நான், அபுஅப்ஸர், சாதிக், முஜிப்) கொண்ட கல்சரைகள் (நாற்காலி என்ற செல்லபெயரும் எங்களுக்கு உண்டு). எங்களின் அரட்டையில் திரைப்படம்தான் முக்கிய கருவாக இருக்கும். ஒரு திரைப்படட்டைப்பற்றி எல்லாவற்றையும் அலசி, ஆராய்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

இந்த வகுப்பு, இந்த ஆசிரியர் என்று இல்லை, எல்லா வகுப்பும் எங்களுக்கு ஒன்றுதான். நாங்கள் எந்த ஆசிரியரையும் விட்டுவைக்கவில்லை. பள்ளி தலைமை ஆசிரியரைக் (எங்களுக்கு கணக்கு பாடம் எடுப்பார்) கூட விட்டதில்லை.

எங்களின் விலங்கியல் வகுப்பு தொடங்கினால், எல்லாவற்றையும்விட மிகச்சிறந்த பொழுதுபோக்கு எங்களுக்கு அதுதான். எங்களின் மதிப்பிற்குரிய விலங்கியல் ஆசிரியர் அவர்களுக்கு, அவரை ஐயா என்றால் அறவே பிடிக்காது. அதனால்தான் எங்களுக்கு அதை சொல்வதற்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு முறை அவர் வகுப்பில் இனப்பெருக்கத்தைப்பற்றி தொடங்க ஆரம்பித்த அடுத்த நொடி குபுக் என்று ஒரு சிரிப்பு சப்தம். பின்னர் அமைதி. அவர் கோபத்துடன் எவைன்யா சிரித்தது என்று கேட்டுவிட்டு மீண்டும் பலகையில் எழுதத்தொடங்க மீண்டும் அதே சிரிப்பு சத்தம். இம்முறை அவரின் கோபம் அதிகரிக்க, அதனால் எங்களின் சிரிப்பும் அதிகரிக்க, ஆரம்பித்த நாங்கள் உள்ளே, மற்ற மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியே. ஆனால் வகுப்பில் சிரிப்பு ஓயவில்லை. இறுதியில் நாற்காலியும் (நாங்கதான்) வகுப்பைவிட்டு வெளியே. வகுப்பை விட்டு வெளியே வந்ததும் மீதம் இருந்தவர்களையும் வெளியே கொண்டு வரணுமே. வெளியில் வந்தும் ஒரே சிரிப்புதான். எங்களைப்பார்த்து மற்றவர்கள் சிரிக்க பதினெட்டில் பதினைந்து வெளியே. இது எங்களின் பள்ளி வாழ்வில் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சி.

(இன்னும் வரும்)

Thursday, April 23, 2009

இரத்ததானம் செய்வோம்.



இரத்ததானம் செய்வோம்.

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் ஐம்பது கிலோ எடையைவிட கூடுதலாக இருந்தால், அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்ததானம் செய்யலாம்.



இயல்பாகவே வயதுவந்தவர்களுக்கு சுமாராக ஐந்து முதல் ஆறு லிட்டர் வரையில் அவர்கள் உடம்பில் இரத்தம் இருக்கும். இதில் 300 ml மட்டுமே தானத்தின் போது பெறப்படும்.

நீங்கள் தானம் செய்யும் இரத்தம், 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தானாகவே உங்கள் உடம்பில் ஊறிவிடும்.



இதற்காக ஓய்வோ, உணவுக்கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.

இவர்கள் இரத்ததானம் கொடுக்கும்முன் 48 மணி நேரத்திற்கு எந்த மருந்தும் எடுக்காமல் இருந்தால் போதும்.



இரத்ததானம் கொடுப்பவர்களுக்கு மூன்று வருடதிற்கு முன்புவரை மஞ்சள்காமாலை நோய் தாக்காதவர்களாக இருக்கவேண்டும்.

இரத்ததானம் கொடுக்க முன்வருபவர்களுக்கு, இரத்தக்கொதிப்பு, அனீமியா போன்ற பாதிப்புகள் இருக்கின்றதா, இரத்ததானம் கொடுப்பதற்குன்டான உடல்வலிமை உண்டா போன்ற சோதனைகள் மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும்.



முறையான இரத்ததானம் செய்பவர்களுக்கு, AIDS அல்லது மற்ற கொடிய நோய்கள் பரவுமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஆகையால் பயமின்றி இரத்ததானம் செய்வோம்.

Tuesday, April 21, 2009

+2 வாழ்க்கை - சில மலரும் நினைவுகள்

+2 வாழ்க்கை

சிலருக்கு கல்லூரி வாழ்க்கை வசந்த காலம். ஆனால் எனக்கோ பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பும் ஆகிய அந்த இரண்டு வருடங்கள் தான்.

எங்கள் நண்பர்கள் கூட்டம் என்றால் பல மாணவர்களுக்கும், ஏன் சில ஆசிரியர்களுக்கும் கூட கலக்கம் தான். அத்தகைய ஒரு பாசக்கார, படிப்பிலும் குறை வைக்காத ஆனால் பொல்லாத பயல்களாய் தான் இருந்தோம்.

பள்ளி முடிந்து கல்லூரி சென்றதும் பழைய மாணவர்கள் என்ற உரிமையில் பள்ளியின் ஆண்டுவிழாவிற்கு சென்றபோது எங்கோ ஒரு மூலையில் கீற்றுக் கொட்டகை தீப்பற்றி எறிந்ததும் நாங்களும் பதறித்தான் போனோம். ஆனால் அடுத்த மூன்றாவது நாள், விழாவிற்கு நாங்களும் சென்றிருந்ததால் ஒருவேளை எங்களுடைய வேளையாக கூட இருக்கலாம் என்று சந்தேகம் கொள்ளும் செய்தி கேட்டு அறிந்தபோது பள்ளி நாட்களில் அளவிற்கு கொஞ்சம் கூடுதலாகவே சேட்டை செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். நாங்கள் செய்தது எல்லாம் என்னவோ அந்த வயதிற்குரிய செல்ல சேட்டைகள்தான்.

பள்ளி முடிந்து நாங்கள் ஒரு நாளும் உரிய நேரத்தில் வீடு திரும்பியது கிடையாது. நண்பர்கள் அனைவரும் எந்த இடம் என்று இல்லை, ஒரே இடத்தில் நின்றுகொண்டே அதுவும் உச்சி வெயில் மண்டையை உடைக்கும் அந்த பகல் நேரத்தில் கூட பதறாமல் பலமணி நேரம் பேசிக்கொண்டு இருப்போம். சூரியனே மண்டை உடைந்து குருதியோடு தலை சாய்வான் ஆனால் எங்கள் அரட்டை ஓய்வதில்லை.

பரீட்சை நேரத்தில் கூட இரவிலே பள்ளிக்கு சென்றுதான் படித்துக்கொண்டே அரட்டை அடிப்போம். எங்கள் நண்பர்கள் கூட்டத்தில் எங்கள் பள்ளி வளாகமும் ஒரு அங்கம்தான் என்றால் கூட மிகையாகாது. அந்த அளவிற்கு எங்கள் பள்ளி எங்கள் மனதில் பள்ளி கொண்டது.

(இன்னும் வரும்)

Tuesday, April 7, 2009

" வேண்டாமே"

ஈவு இரக்கமற்ற, இத்துப்போன நெஞ்சம் படைத்த பிள்ளைகளாலும்,
காலத்தின் தேவையாக, காலத்தின் கட்டாயமாக, காலத்தின் குரலாக
எழும்பிக் கொண்டிருப்பவைதாம் இன்றைய முதியோர் இல்லங்கள்.

"நம் குழந்தைகள், நம் வழியாக வந்தவர்கள். ஆனால் நமக்காக வந்தவர்கள் இல்லை. அவர்களுடைய வாழ்வை வாழ வந்தவர்கள். நம்மை வாழ்விக்க வந்தவர்களில்லை. எதிர்பார்ப்பு இல்லையெனில் ஏமாற்றமும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால், முதுமையை இரு கரம் நீட்டி வரவேற்கலாம்" என்று தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறிக்கொள்ளும் அவல நிலை தான் இன்றைய ஒரு சில பெற்றோர்களின் நிலை.



நீ பிறப்பதற்கு தவமாய் தவமிருந்து
பிறந்ததும் அளவற்ற மகிழ்சியில் திழைத்து
தவழ்ந்தபோது உன்னுடன் தவழ்ந்து
நீ நடைபழகும்போது விரல்தந்து
ஓடியபோது கூடவே ஓடி
பசித்து அழுதபோது பதறி எழுந்து
தூழிக்கு பதிலாக தோள்களை தொட்டிலாக்கி
தொண்டை வரலும்வரை தாலாட்டி
எட்டி உதைத்த கால்களை முத்தமிட்டு
நெஞ்சிலேறி மிதித்து குதித்தபோது
வலித்தும் வலிக்கவில்லை என்று பொய் சொல்லி
நீ நல்ல துணி போட அயராது உழைத்து
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தில்
மச்சி வீடு கட்டி உன்னை மகிழவைத்து
கஸ்டத்தில் இருந்தாலும்.. நீ கேட்ட நேரத்தில் கேட்டததைத்தந்து
உன்படிப்புக்காக குடியிருந்த வீட்டைக் கொடுத்து
நீ படிப்பதை பார்த்து மகிழ்ந்து
திருமணம் என்னும் சடங்கையும் முடித்து
நீ கட்டிய வீட்டில் ஒருமூலையிலாவது வாழலாம்
என்று எண்ணிக்கொண்டு இருக்கையில்
வாஞ்சயுடன் வந்து சொல்கிறாயே
இனி நீங்கள் சந்தோசமாக இருக்கலாம்
முழு சுதந்திரமாய் முதியோர் இல்லத்தில்



மனிதா மரபுகளை மறந்துவிடாதே
மனிதத்தை இழந்து விடாதே



பெற்றோர்கள் முதியவர்களாகிவிட்டால் சீ என்ற ஒரு சொல்லால் சொர்க்கத்தை இழந்துவிடுவோமாம்

இத்தகைய மதிப்புள்ள பெற்றோரை நாம் பேணி காக்கவேண்டாமா. சிந்தித்து பார் செயல்படுத்திப்பார் சொர்க்கத்தை அடைவாய் நிச்சயமாக

மாற்றம் ஒன்று தான் மாறாதது. நாம் விரும்பினாலும், வெறுத்தாலும் எதிர்வரும் காலம் இதைத்தான் செய்யப்போகிறது. ஆனால் நம்மை பெற்றெடுத்தவர்களுடன் இந்த தத்துவம் பிரதிபலிக்க வேண்டாம். வேர்களுக்கு வெந்நீரை ஊற்றிவிட்டு நீ விழுதுகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கலாமா?