
தினந்தோறும்
நித்திரைக்குமுன் சில நிமிடங்கள்
நீண்டும் முதிர்ந்தும்
இறந்த காலத்தின்
நினைவுகள் மட்டும்
இன்னமும் இறக்காமல்
இலேசானவனாய் மிதக்கவிடாமல்
சுமையேற்றப்பட்டு
காலத்தால் செதுக்கி செதுக்கி
சிதைக்கப்பட்டவன்.
பணவிலங்கின் வாய்க்குள்
என்னோடு அவளின் இளமையும்
மழுங்கிய பார்வை
மெல்ல விலக
தெளிவான பார்வைக்குள்
பல்வேறு பிம்பங்களாய் நான்
தூக்கம்
இருண்ட மா மரமாய்
மின்மினிகளாய்
கனவுகள்
இப்படியாய் ஒவ்வொர் இரவும்
அராஜக நிசிகளின் குரல்வளை நெரிக்க
வளிம மிருகமேறி சென்றேயாகவேண்டும்
வாய் நீர் வடித்துக்கொண்டே
உறங்கும் என் மக்களின்
கன்னத்தின் மென்மை உணர.