அவள் போய் விட்டாள் எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, "இனி நீயே கதி!" என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, அவள்;அன்பு காட்டுவதில் தாயும் தாரமும் ஒன்று தான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுக துக்கம் இரண்டிலும், இத்தனை நாளும் எவள் பங்கெடுத்துக்கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திர ஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாளோ, அவள்!
அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.
நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்; அவள்? போயே போய் விட்டாள்!
அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன, நான் ஏன் இருக்கிறேன்? 'அவள் போனால் போகிறாள்!' என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்? என் தலையில் இன்னொருத்தியைக் கட்டி வைக்கவா? ரகுவும் சீதையும் ஏன் இருக்கிறார்கள்? 'நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்!' என்று பிறர் என்னை வற்புறுத்தவா? எப்படி முடியும்?
தாம்பத்திய வாழ்க்கையில் மனித வர்க்கத்தை விட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாக தோன்றுகின்றன. அவை எந்த காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கைவிடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் நாமும் அவற்றைப் பின்பற்றுவது சாத்தியமா? அது எப்படிச் சாத்தியமாகும்! ரகுவையும் ராதையும் விட்டு விட்டு நாம் எப்படி ஊணுறக்கமின்றி உயிரை விட முடியும்?
அப்புறம் அம்மா? நமக்குப்பின் அவள் கதி? அந்தப் புறாக்களுக்குத்தான் பாசமென்றும் பந்தமென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்சம் பறக்கும் சக்தி வந்ததும் அவை தங்கள் குஞ்சுகளை விரட்டி விடுகின்றன. நம்முடைய குழந்தைகளை நாம் அப்படி விரட்டிவிட முடியுமா? ஐயோ, எப்படி முடியும்?
முடியா விட்டால் என்ன? இரண்டாந்தரம் கல்யாணம் செய்து கொள்ளாமலே நாம் வாழ முடியாதா?
ஏன் முடியாது?
அம்மாவுக்கோ வயதாகிவிட்டது; அவளால் எந்த காரியத்தையும் இனி கவனிக்க முடியாதுதான் அதனால் என்ன, சமையலுக்குத்தான் சங்கரனை வைத்தாகி விட்டதே! பார்ப்போம்:
நாளடைவில் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு மனக்கவலை ஏக்கம்: ஏன் இப்படி?
இத்தனை நாளும் பார்ப்பதற்கு லட்சணமாயிருந்த சங்கரனை இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் சமயலையும் சாதம் பரிமாறுவதையும் சகிக்கவே முடிவதில்லை.
"காப்பி கொண்டு வரட்டுமா?" சாதம் போடட்டுமா? என்று அவன் கேட்கும்போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.வியர்க்க விறுவிறுக்க அவன் எதிரில் வந்து நின்றால் என் உடம்பே பற்றி எரிவது போல் இருக்கிறது.
சாட்டைப் போல் தலைமயிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, தலை நிறைய பூவை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை வளைகள் கலகலவென்று சப்திக்க, அப்படியும் இப்படியுமாக 'அன்ன நடை' போட்டுக் கொண்டிருந்த அந்த அழகு தெய்வம் எங்கே, இந்த அவலட்சணம் எங்கே?
"காப்பியா? இதோ, கொண்டுவந்து விட்டேன்?"
"சாதமா? இதோ, போட்டு விட்டேன்!" என்று அவள் குயிலைப் போலக் கொஞ்சுவது எங்கே? இவன் கழுதை போலக் கத்துவது எங்கே?
அவன் செய்யவேண்டியது வேலை; வாங்கவேண்டியது கூலி இவற்றைத் தவிர அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
இப்படிப்பட்ட வாழ்க்கையில் அன்புக்கு இடமுண்டா? அன்புக்கு இடமில்லை என்றால் இந்த வாழ்க்கை என்னத்திற்கு ? இந்த உலகம் தான் என்னத்திற்கு?
இப்படியெல்லாம் என்மனம் இப்பொழுது எண்ணமிடுகிறது; எண்ணமிட்டு ஏங்குகிறது.
வீட்டில் உள்ளவையெல்லாம் போட்டது போட்ட இடத்தில் கிடக்கின்றன. ஏற்ற இடத்தில் எடுத்து வைக்கப்படவில்லை' வீடே வெறிச்சென்று கிடக்கிறது. இத்தனைக்கும் அவளைத் தவிர வீட்டில் எல்லாமே இருக்கின்றன; இருந்தும் என்ன? ஒன்றுமே இல்லாதது போலல்லவா இருக்கிறது!
நல்ல வேளையாகக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு மட்டும் தன் சிநேகிதி சீதாவை அவள் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.
எதிர் வீட்டில் குடியிருப்பவள் அவள்; வாழ்க்கை இன்னதென்று தெரியுமுன்பே விதவையாகி விட்டாள். அவளுக்குத் தகப்பனார் இல்லை. தாயார் இருந்தாள். இவர்கள் இருவருக்கும் ஜீவனோபாயம் அளித்து வந்தது ஒரே ஒரு இயந்திரம் தையல் மெஷின் உணர்ச்சியற்றது! ஆம். உணர்ச்சியுள்ள உறவினர்கள் பலர் அவர்களுடைய திக்கற்ற நிலையைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்து விட்டார்கள்! அந்த சீதாதான் இப்போது ரகுவுக்கும் ராதைக்கும் தாயார்!
குழந்தைகள் இருவரும் தலைவாரிக் கொள்ளவேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள். பொட்டிட்டுக்கொள்ள வேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள். சட்டைப் போட்டுக் கொள்ள வேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள்.
எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பாராமல் அவள் இத்தனை காரியங்களையும் செய்து வந்தாள்.
ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக்குரல் கேட்டது, செவிமடுத்தேன்.
"நிமோனியாவாம்; மிக்சர்' கொடுத்தார்!" என்றாள் அவள்.
அவ்வளவுதான்; "யாருக்கு நிமோனியா" என்று உடனே கேட்டுவிட என் மனம் துடித்தது.
அதற்குள் "காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது நன்றாகத்தானே போனாள்?" அதற்குள் இப்படி வந்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.
"எல்லாம் சரியாய்ப் போய்விடும் மாமி!" என்று தேறுதல் சொன்னாள் சீதா.
நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.
"மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம் "ஆரோரூட்" கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம், என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும் 'விருட்'டென்று வெளியே போய்விட்டாள்.
"பகல் பன்னிரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது குழந்தைக்கு நல்ல ஜுரம். சீதா தான் டாக்டர் வீட்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா தெரிகிறது!" என்றாள் தாயார்.
அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆறவைத்துக் குழந்தைக்கு குடிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. "அம்மா, அம்மா" என்று அலறினாள்.
"உனக்கு அம்மா இல்லேடி கண்ணு." என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் தாயார்.
"ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டி கொண்டு போனாளே அம்மா!" என்றாள் குழந்தை.
"அந்த அம்மா வாடி? இதோ அழைச்சிக்கிட்டு வறேன்!" என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டு சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.
அவள் வந்து குடிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!
சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.
அடுத்தபடி மருந்து கொடுக்கும் வேளை வந்தது. நான் கொடுக்க முயன்றேன். குழந்தை குடிக்கவில்லை. அதற்கும் சீதாதான் வரவேண்டியிருந்தது.
"ஐயோ, அவளுக்கு வேலை தலைக்கு மேலிருக்குமே" என்று அம்மா வருந்தினாள்.
" அதற்கென்ன மாமி, பரவாயில்லை!" என்றாள் அவள். ராதையின் ஜுரம் நீங்குவதற்கு மூன்று வாரங்களாயின. அந்த மூன்று வாரங்களும் சீதா, ராதையுடனே இருந்தாள்.
இந்தச் சமயத்தில் தான் என் மனத்தில் ஒரு சபலம் தட்டிற்று. ஏற்கெனவே சமூகச் சீர்திருத்தத்தில் பறுக்கொண்டிருந்த என் மனம் சீதாவை நாடியது அவள் சம்மதிப்பாளா? அவள் சம்மதித்தாலும் அவளுடைய தாயார் சம்மதிப்பாளா?
யார் சம்மதிக்காவிட்டால் என்ன? என்னை பார்த்து அவளும், அவளைப் பார்த்து நானும் சம்மதித்தால் போதாதா? இந்த அநித்தியமான உலகத்தில் பிறருடைய விருப்பும், வெறுப்பும் யாருக்கு என்ன வேண்டிக்கிடக்கிறது?
ஒரு நாள் துணிந்து இந்த விஷயத்தை என் தாயாரிடம் வெளியிட்டேன்.
அவள் "சிவ சிவா!" என்று காதை பொத்திகொண்டு, ரொம்ப நன்றாய்த்தான் இருக்கிறது; இந்த மாதிரி இன்னொரு தரம் சொல்லாதே! என்று சொல்லி விட்டாள்.
அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும் தாயாருக்கும் இடையே பின்வரும் சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.
"என்ன இருந்தாலும் பெண்பிள்ளை இல்லாத வீடு ஒரு வீடு ஆகுமா?" இது சீதாவின் குரல்.
"நானும் அதைத்தான் சொல்லுகிறேன்; கேட்டால்தானே?" இது என் அம்மா."
"ஏனாம்? இவரைவிட வயதானவர்கள், ஏழெட்டுப் பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் இரண்டாந்தாரமாகக் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லையா?"
"இவன் என்னமோ சமூகத்தை சீர்திருத்தி விடப் போகிறானாம்; விதவைகளின் துயரத்தைத் தீர்த்துவிடப் போகிறானாம். அதற்காக இரண்டாந்தாரமாகக் கல்யாணம் செய்து கொள்வதென்றால் இவன் எவளாவது ஒரு விதவையைத்தான் கல்யாணம் செய்து கொள்வானாம் இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே எனக்கு வெட்கமாய் இருக்கிறது!"
"எந்த விதவை இவரை கல்யாணம் செய்து கொள்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்தப் புருஷர்கள் தான் 'விதவா விவாகம்'என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்கள். எந்தப் பெண்ணாவது அப்படிச் சொல்கிறாளா? பைத்தியந்தான்."
இதை கேட்டமாத்திரத்தில் என் மனக்கோட்டை இடிந்து விழுந்தது. எண்ணங்கள் மூலைக்கு ஒன்றாக சிதறின.
ஆனாலும் ஆசை அத்துடன் என்னை விட்டுவிடவில்லை. எதற்கும் ஒரு கடிதம் எழுதி கேட்டுவிடுவதென்று தீர்மானித்தேன். அந்தக் கடிதத்தின் முதலில் விதவா விவாகத்தின் அவசியத்தை வற்புறுத்தி, நடுவே என் ஆவலை வெளியிட்டு, கடைசியில் கடிதம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தயவு செய்து பரம ரகசியமாகப் பதில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேற்படி கடிதத்திற்கு வந்த பதில் இதுதான்:
வணக்கம்
மறுமணம் செய்துக் கொண்டால் விதவையின் துயரம் தீர்ந்து விடும் என்று சிலர் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா? என்னால் அதை நம்ப முடியவில்லை. அதற்காக வழிவழியாக வாழ்ந்து வரும் காதலை கொன்றுவிடவும் நான் விரும்பவில்லை.
எனவே என்னை பொறுத்தவரை, நான் பூசிக் கொண்ட மஞ்சளும், வைத்துக்கொண்ட குங்குமத் திலகமும், சூடிய மலரும், அணிந்த வளையலும் 'அவ'ருக்காகத்தான்.
வேறொருவருக்காக அவற்றை மீண்டும் அணிந்து கொள்வதென்பது இந்த ஜென்மத்தில் முடியாத காரியம்.
மன்னிக்கவும்.
சீதா.
மேற்படி கடிதத்தை படித்து முடித்ததும் பெண்கள் சபலச் சித்தம் உள்ளவர்கள் என்று சொன்ன மேதாவிகளின் மேதையை எண்ணி நான் சிரித்தேன், வைர நெஞ்சுடன் அவள் வாழும் முறைமையைப் பற்றி எண்ணியெண்ணி வியந்தேன். அப்போது காற்றிலே மிதந்து வந்த கீதமொன்று.
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"
என்று இசைத்து, மறுமணம் அல்ல திருமணம், ஒரு மனமே திருமணம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்றது.
Monday, January 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இரண்டு பாகமா பிரித்து போடுப்பா ...
பெருசாக்கீது ...
நல்ல கலெக்ஷ்ன் நவாஸ்..
//என்னை பொறுத்தவரை, நான் பூசிக் கொண்ட மஞ்சளும், வைத்துக்கொண்ட குங்குமத் திலகமும், சூடிய மலரும், அணிந்த வளையலும் 'அவ'ருக்காகத்தான்//
உண்மையா தன் கணவனை காதலித்த பெண்ணின் வெளிப்பாடு
Post a Comment