தரையை துடைத்துக்கொண்டிருந்த பார்வதி கிழவிக்கு வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ஈரத்துணியை எரிச்சலுடன் சோப்பு நுரை நிரம்பிய வாளியில் எறியாத குறையாய் வைத்துவிட்டு கதவை நோக்கி குரல் கொடுத்தாள். "யாரு?".
"அம்மா கூரியர்" என்று பதில் வந்ததும், "ஆத்தாடி, இந்த முட்டிவலி வேற" என்று மெதுவாக முனங்கிக்கொண்டே ஒரு கையை தரையில் ஊன்றி மெல்ல எழுந்து கொண்டு "இருங்க வாரேன்" என்றபடியே கதவை நோக்கி போனாள்.
கதவைத் திறந்தவள், "என் மகளும் மருமகனும் கோயிலுக்கு போயிருக்காங்க. உங்களுக்கு யாரு வேணும்? என்றாள். "ஒண்ணுமில்லை பாட்டி, வெளிநாட்டிலிரிந்து லெட்டர் வந்திருக்கு, இத அவங்க வந்தா கொடுத்துடறீங்களா?. நான் போயிட்டு திரும்ப வரணும்னா அரை நாள் எனக்கு வீணாகும்". யாரு சின்னவன் கிட்டயிருந்தா வந்திருக்கு. சந்தோஷத்தில் பூரித்தாள். கொடுங்க தம்பி, என் மககிட்ட நான் கொடுத்துக்கிறேன் என்றதும் இதுல ஒரு கையெழுத்து போடுங்க பாட்டி என்றான். எனக்கு அதெல்லாம் தெரியாது, கொடுங்க வேணும்னா வெரல் வைக்கிறேன் என்றாள். கைநாட்டு வாங்கிக் கொண்டு அவர் நகர, கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.
அரைமணி நேரம் கழித்து சுந்தரேசனும், பத்மாவும் உள்ளே வந்தனர். என்ன ஆத்தா வீடு கழுவுநியாக்கும். சும்மாவே உனக்கு முட்டி வலி. அப்புறம் எதுக்கு ஆத்தா செரமப்படுரே என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அவளுடைய மொபைல் சிணுங்கியது. போனில் பேரைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.
அய்யா ஷண்முகம் நல்லா இருக்கியா? நாங்க நல்லா இருக்கம்யா. இன்னைக்கு சின்னவன் பொறந்த நாள் இல்லையா? அதான் சாமி பேருல ஒரு அர்ச்சனை பண்ணிட்டு இதோ, இப்பதான் வீட்டுக்குள்ளே வந்தோம். இல்லைய்யா தம்பிகிட்ட இருந்து ஒரு தகவலும் இல்ல. நாலு மாசம் ஆச்சுய்யா. நீ எப்பய்யா ஊருக்கு வர்றே?. தோள்பட்டை வலி தேவலையா? உடம்ப பத்திரமா பார்த்துக்கய்யா. அய்யா கொல்லைப்பக்கம் போயிருக்காகய்யா மொகங்கால் கழுவ. நான் சொல்லிக்கிறேன்யா. வைக்கட்டுமாய்யா? போனை வைத்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டாள்.
சின்னவன் ராசு கிட்டயிருந்து போன் வந்து நாலு மாசம் ஆச்சி. புள்ள எப்படி இருக்கானோ என்ற கவலை அவளை ஆட்க்கொண்டது. மூணு மாசம் முன்னாடி அதே நாட்டுல வேலை பார்க்கும் ஆறுமுகம் ரெண்டாவது தடவையா ரெண்டு மாசம் லீவுல வந்திட்டு போயிருந்தான். அஞ்சு வருஷம் முன்னாடி ரெண்டு பேரும் ஒன்னாதான் ஓமன் நாட்டுக்கு வேலைக்கு போனாங்க. போன தடவ வந்திருந்தப்ப தான் ஆறுமாசமா சம்பளம் கொடுக்கல, தங்குறதுக்கு சரியான இடம் கொடுக்கலேன்னு சொல்லி ராசு வேலைப் பார்த்த முதலாளி கம்பெனியிலிரிந்து ஓடிப் போயிட்டான்னும், இப்போ எங்கே இருக்கான்னும் தெரியலேன்னு ஆறுமுகம் சொன்னப்ப ரொம்பவே பயந்து தான் போனாள். இந்த விஷயம் எதுவுமே ராசு அவளிடம் சொன்னதில்லை. அவனிடமிருந்து பணமும் கடுதாசியும் மாதம் தவறாமல் வந்து கொண்டு தான் இருந்தது. ஆறுமுகம் சொல்லும் வரை அவளுக்கும் ஒன்றும் தெரியாதுதான். ஆறுமுகம் புறப்பட்டு போன மூன்றாவது நாள் ராசு போன் பண்ணிய போதுதான் அவள் விவரம் கேட்டாள்.
அவன் வெளியில் பங்களாதேஷ் நாட்டவர்களுடன் தங்கி இருப்பதாகவும் பழைய இரும்பு வியாபாரம் செய்வதோடு கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னான். ரொம்ப கஷ்டம்னா ஊருக்கு வந்திடுய்யா என்று அவள் அழுதாள். இல்ல ஆத்தா முடிஞ்ச அளவுக்கு விசாக்கு கட்டுன பணம் கிடைக்கிற வரைக்குமாவது நான் இங்க இருந்து தான் ஆகணும். நீ தைரியமா இரு ஆத்தான்னு சொல்லிட்டு வச்சிட்டான். கடந்த ரெண்டு வருஷமா காசுபணம் ஒழுங்கா அனுப்பிகிட்டு இருக்கான். இப்பதான் நாலு மாசமா ராசுகிட்ட இருந்து போனும் இல்ல ஒரு கடுதாசியும் இல்ல.
பத்மா! நான் உன் அண்ணனை பார்த்துட்டு சாயந்திரவாக்குல வாரேன் என்ற பார்வதி பாட்டி திடீரென்று நினைவு வந்தவளாக 'தாயி ராசுகிட்ட இருந்து கடுதாசி வந்திருக்கு அந்த ஜன்னல்ல வச்சிருக்கேன் பாரு" என்றபோது ஏன் ஆத்தா இவ்ளோ நேரம் கழிச்சு சொல்றே என்று அவளைக் கடிந்து கொண்டே சந்தோஷத்தில் வேகமாக எடுக்கப் போனபோது கீழே விரித்திருந்த கிழிந்த பாயின் நூல் இடறி விழப் போனாள். பின்னர் சுதாரித்துக் கொண்டு அந்த கடிதத்தை எடுத்து பிரித்து படிக்கத் தொடங்கினாள். கை கால் கழுவி விட்டு உள்ளே வந்த சுந்தரேசனும் அவள் அருகில் அமர, பத்மா அவருக்கும் கேட்கும்படி படித்தாள்.
கடிதத்தில், "அம்மாவுக்கும் அய்யாவுக்கும் ராசு எழுதிக்கொள்வது. இங்கே நான் நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சொகமா இருக்கீயளா. அம்மாயி எப்படி இருக்கு? என்னப்பத்தி கவலைப்பட வேணாம். நான் அடுத்த மாசம் கடைசியில ஊருக்கு வாரதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு எழுதும் முக்கியமான செய்தி என்னன்னா, என்கூட வேலைப்பார்த்த சரவணன் என்ற பையனும் என்கூட வரான். தமிழ்ப் பையன்தான். அவன்தான் நான் வேலையில்லாம இருந்தப்ப அவனோட அறையில தங்கவச்சி சாப்பாடு போட்டது. அதுமட்டுமில்லாம அவன்தான் பணமும் உங்களுக்கு அனுப்பினான். எட்டு வருஷமா ஊருக்கு போகாம இங்கயேதான் இருக்கான். குடும்பத்தோட குஜராத்ல இருந்தாங்க. அஞ்சாறு வருஷம் முன்னாடி நடந்த நிலநடுக்கத்துல அவனோட மொத்த குடும்பமும் இறந்துட்டாங்க. அதுனால ஊருக்கே போகாம இங்கேயே இருக்கான்.
நாலு மாசம் முன்னாடி பழைய இரும்பு பொறுக்குவதற்காக நாட்டோட எல்லைக்கு போனோம். எனக்கு அந்த சமயத்தில உடம்பு சரியில்லாம இருந்ததால என்னை வண்டியிலேயே இருக்கச் சொல்லிட்டு அவன் மட்டும் போனான். அப்போ கீழே கிடந்த ஒரு பொருளை எடுக்க அது பயங்கர சத்ததோட வெடிச்சிடுச்சு. நல்ல வேலை உயிர் போகல. அந்த விபத்துல சரவணனோட ஒரு கையும் ஒரு காலும் ரொம்ப சேதமடைஞ்சு போச்சு. நாலு மாசம் கழிச்சு இப்பதான் கொஞ்சம் தேறி இருக்கான். என்னை அந்த விபத்துல இருந்து காப்பாத்தின அவனை அப்படியே விட்டுட்டு வர மனசு இல்ல. அவனுக்கும் யாரும் இல்ல. அவன் மனசை மாத்தி நான் நம்ம ஊருக்கே கூட்டிகிட்டு வாரேன். அதனால உங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காதுன்னு நினைக்கிறேன். உங்க பதிலை இந்த கடுதாசியில உள்ள நண்பரோட அட்ரசுக்கு உடனே அனுப்பி வைக்கவும். இப்படிக்கு மகன் ராசு".
என்னங்க ராசுக்கு என்ன பதில் எழுதப் போறீங்க. எனக்கு ஒன்னும் புரியலையே. என்ன செய்ய? என்ற பத்மா சுந்தரேசனை கவலையோடு பார்த்தாள். மகன் ஊருக்கு வருவது சந்தோசமாக இருந்தாலும் சரவணன் பற்றிய செய்திகள் அவர்கள் மனதிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. நீ ரொம்ப யோசனை பண்ணி குழம்பாதே. நான் அவனுக்கு பக்குவமா எழுதி அனுப்புறேன் என்றவர், பழைய நோட்டு புத்தகத்திலிரிந்து ரெண்டு தாள்களைக் கிழித்து உடனே எழுதத் தொடங்கினார்.
"அன்புள்ள ராசு, உன்னோட கடுதாசி கெடச்சிது. நீ ஊருக்கு வர்றேன்னு எழுதி இருந்தது ரொம்ப சந்தோசம்யா. சரவணன் செய்தி படிச்சதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குய்யா. நீ ஊருக்கு கூட்டிகிட்டு வாரேன்னு எழுதி இருந்தே. கஷ்டப்படுற புள்ளைக்கு கண்டிப்பா உதவி செய்யணும். ஆனால் உன் ஆத்தாவ பத்திதான் உனக்கு தெரியுமே. நெஞ்சு வலிக்காரி, அதோட நம்ம வீட்டுல வேற யாரும் இல்ல. பெரியவன் பட்டினத்துலையே இருக்கான். இந்த மாதிரி இருக்கும்போது சரவணன் நிலைமைக்கு அவனோட எல்லா வேலைக்கும் ஒத்தாசையா ஒரு ஆளு கூடவே இருக்கணும். அன்னந்தண்ணி கொடுக்கமட்டுமில்லை, ஒதுக்குபுறமா போகனும்னாலும் துணை இல்லாம முடியாது. அப்படி இருக்குறச்சே நம்ம வீட்டுல சரியா வருமான்னு ரோசனை பண்ணி பாருய்யா. இல்லேன்னா நீ கூட்டிகிட்டு வந்ததுக்கப்புறம் வேற எதாவது தோது பன்னுவம்யா. நம்ம வீட்டுல வச்சி கவனிக்கிறதுங்கறது சரிப்பட்டு வராதுய்யா. மத்த வெவரமெல்லாம் நீ வந்ததுக்கப்புறம் பேசலாம். நீ முதல்ல நல்லபடியா ஊருக்கு வாய்யா. உன்னை எதிர்பார்த்திருக்கும், அம்மாவும், அய்யாவும்.
சரியா பதினஞ்சு நாள் கழிச்சு ஓமன் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து தந்தி வந்திருந்தது. "உங்கள் மகன் ராசு விபத்தில் சிக்கி கை கால்களை இழந்துவிட்ட துக்கத்தில் மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய கடிதமும் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவரின் உடலை மற்ற விதிமுறைகள் பூர்த்தியடைந்ததும் உங்கள் ஊருக்கு அனுப்பிவைக்கப்படும்.உங்கள் குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்".
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Sunday, June 7, 2009
Sunday, May 17, 2009
தைரியம்

தேசியக்கல்லூரி.
மாணவர்கள் சிலர் வகுப்பறைக்கும் பலர் கேன்டீனுக்கும் சென்றுகொண்டிருந்த நேரம். அதிகாலைப் பெய்த கனத்த மழையின் மிச்சங்களாய் இன்னமும் காற்று சில்லென்று இருந்தது.
ரமேஷும் பாலாவும் கேண்டீனை விட்டு வெளியில் வந்தனர். "சொன்னதெல்லாம் புரிஞ்சுதுல்ல, சொதப்பாம பேசு மச்சான்" என்றான் பாலா. "டேய், வேணாம் மச்சான். பயமா இருக்குடா". கலவரத்தோடு சொன்னான் ரமேஷ். "ஒன்னும் கவலைப்படாதே. தைரியமா போடா. நீ எதுவும் பண்ண வேணாம். ஒரு அஞ்சு நிமிஷம் ரியா கிட்ட பேசு. போதும்" இது பாலா.
"இல்லடா, ரொம்ப கஷ்டம்டா. என்னால முடியும்னு எனக்கு தோணல"". என்றவாறே கைக்குட்டையால் முகம் துடைத்தான் ரமேஷ்.
ரமேஷும் பாலாவும் தொடக்கப்பள்ளி முதல் ஒன்றாக பயின்று வருபவர்கள். பள்ளியில் தோழர்களாய், +2-வில் நெருங்கிய நண்பர்களாய் இருந்தவர்கள், கல்லூரி சென்றதும் உற்ற நண்பர்களாய் ஆனார்கள். எவருக்காகவும், எதற்காகவும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காதவர்கள்.
"மச்சான், இங்கே பார், நான் உன்னை அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லவில்லை. ஒரு அஞ்சு நிமிஷம் பேசு, அது போதும். எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால முடியும். போ. உன்ன ஒன்னும் கடிச்சு தின்னப் போறதில்ல அவள்". பாலா அவனை உற்சாகப்படுத்தினான்.
"மச்சான், ஒருவேளை அவள்" என்று ரமேஷ் இழுக்க, "ஒன்னும் இல்ல, ரெண்டும் இல்ல. ஜஸ்ட் போயி பேசு." என்று பாலா சொல்ல, ஒரு வழியாக ரியாவை நோக்கி தயங்கி தயங்கி நடக்கத் தொடங்கினான். அவள் அருகில் சென்றதும் பாலாவைத் மீண்டும் ஒருமுறைத் திரும்பிப் பார்த்தான். அவன் "தைரியமா போடா" என்று காற்றில் சைகை செய்தான். பாலாவும் ரமேஷின் பயத்தை பார்த்து லேசாக கொஞ்சம் கலங்கத்தான் செய்தான்.
கேன்டீனின் எதிரே இருந்த சிமெண்ட் பெஞ்சில் ரியா அமர்ந்து இருந்தாள். தன்னுடைய கைப்பையில் எதையோ தேடி அது இருப்பது கண்டதும் திருப்தி அடைந்து முகம் மலர, ரமேஷ் அவள் முன்னே சென்று நின்றான்.
ரியா, மொத்த கல்லூரியே அவள் பின்னால் சுற்றும் அளவிற்கு பேரழகி இல்லையென்றாலும், அவள் வகுப்பில் அவள்தான் கூடுதல் மதிப்பெண் பெற்றவள், மதிப்பிட்டவர்கள் மாணவர்கள் என்று சொல்லத் தேவையில்லை. எல்லோரோடும் இனிமையாகப் பேசுவாள்.
ரமேஷ் அவள் அருகில் சென்றதும், இருவரும் பேசிக்கொண்டதும், முதலில் அவள் முகத்தில் ஏற்பட்ட கலவரம், பின்னர் இருவரும் சாதரணமாகப் பேசிக்கொண்டது அனைத்தையும் தூரத்தில் இருந்து பாலா பார்த்துக்கொண்டிருந்தான். "என்ன பாலா கிளாசுக்கு போகல?" H.O.D. கேட்டுக்கொண்டே அவனைக்கடந்து போனபோது காதில் விழுந்தாலும் கவனம் இல்லை. அவனது கவனம் எல்லாம் செடியை பிடுங்கும் போது வேரைப்பிரியும் மண்ணின் பிடிவாதத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
பரபரப்பான பதினைந்து நிமிடங்கள். அதோ சிரித்துக்கொண்டே இருவரும் எழுந்து விட்டனர். இருவரும் விடைபெற்று ரமேஷ் பாலாவை நோக்கி வந்தான். பாலாவால் இருப்பு கொள்ள முடியவில்லை. என்னடா ஓகேயா? என்று கேட்டுக் கொண்டே அவனை சந்தோஷத்தில் கட்டிப் பிடித்தான். சொல்லு மச்சான். என்ன ஆச்சு?.
நான் அவகிட்டே சொல்லிட்டேன் மச்சான். திடீர்னு சொன்னதும் முதல்ல கொஞ்சம் மிரண்டா. அப்புறம் முகம் வெக்கத்துல சிவக்க ஆரம்பிச்சது. அவளுக்குள்ளும் காதல் இருக்குடா. ஆனால் ஒரு விஷயம் கண்டிப்பா சொல்லிட்டா மச்சான்.
என்னடா சொன்னாள்?
தைரியம் இருந்தா பாலாவையே வந்து என்கிட்டே நேரடியா அவன் காதலை சொல்லச் சொல்லுன்னு வெக்கப்பட்டுகிட்டே சொன்னாடா. இப்போ தைரியமா போய் சொல்லு மச்சான் என்றான் ரமேஷ் பாலாவிடம்.
Labels:
சிறுகதை
Monday, May 11, 2009
அதிர்ஷ்டம்

அதிகாலை 6 மணி, அரை எண் 13, சாவித்ரி சேரில் அமர்ந்தபடி மேஜையின் மேல் ஒருகை நீட்டி மற்றொரு கையை அதன் மேல் மடித்து தலையனையாக்கி அரை உறக்கத்தில் இருந்தாள்.
சாரதா ஆயா தரை முழுவதும் டெட்டால் கலந்த நீரால் துடைத்து விட்டு சென்று இருந்தாள். அதனால் ஆஸ்பத்திரி வாடை கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது.
அடுத்த அறை வாசலில் யாரோ ஒரு சிறுவன் கையில் சில்வர் தூக்குடன் தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் "அம்மா காப்பி வாங்கவா? டீ வாங்கவா?. அவன் அம்மா எதுவோ சொல்லி இருக்க வேண்டும். சில்லறையை பத்திரமா வாங்கிட்டு வாடா என்று சொன்னது மட்டும் கொஞ்சம் சத்தமாக காதில் விழுந்தது.
பெட்டில் வாசுதேவன் உறக்கத்தில் இருந்தான். உறக்கத்தில் என்று சொல்வதை விட உணர்வற்று கிடந்தான். ஏழு மாதங்கள் ஆகிவிட்டது இந்த மருத்துவமனையில் அனுமதித்து. "கோமா". அவளைத் தவிர வேறு யாரும் அவனுடன் இல்லை. இதுவரை யாரும் வந்து பார்க்கவும் இல்லை. அவன் நன்றாக இருந்தபோது ஆடிய ஆட்டம் அப்படி
நேற்று முன்தினம்தான் ஜெர்மனியில் இருந்து வந்த டாக்டர் உத்தரவாதம் கொடுத்து இருந்தார்.
கையில் ட்ரேயுடன் ஹெட் நர்ஸ் உள்ளே வந்தாள். சாவித்ரி இரவு முழுவதும் விழிப்பதும் உறங்குவதுமாய் இருந்தவள் அதிகாலையில் கொஞ்சம் கண் அயர்ந்து விட்டாள். பளிச்சென்று இருந்த நர்ஸ் தேவி, "என்னக்கா! இராத்திரி முழுவதும் தூங்கலையா? இராத்திரி ஏதாவது அசைவு தெரிந்ததா? என்று கேட்டாள்.
"இல்ல தேவி. ஒரு முறை கை அசைந்தது போல் இருந்தது. அது என்னோட பிரம்மையா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு" என்றாள்.
கவலைப்படாதீங்க அக்கா. அதான் சீப் டாக்டர் சொல்லிட்டாருல்ல, இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ள அவருக்கு நினைவு வந்துரும். ஏழு மாசமா நீங்க அவர்கூடவே இருக்கீங்க. இன்னும் ரெண்டு மூணு நாள்தானே. எல்லாம் சரியாகும். தைரியமா இருங்க.
தேவி சந்திரனின், தினமும் எடுக்கும் பல்ஸ், இரத்தகொதிப்பின் அளவு, எல்லாம் குறித்த பிறகு "நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வாரேன் அக்கா' என்று சொல்லிவிட்டு அடுத்த அறையை நோக்கி போனாள்.
தெர்மாசில் இருந்த காப்பியை கொஞ்சம் கப்பில் ஊற்றி ஜன்னல் வழியாக வெளியில் நோக்கினாள். ஆட்டோவில் யாரையோ கைப்பிடித்து உள்ளே ஒருவர் அமர்த்த, அதன் பின் அவரும் அமர ஆட்டோ நகரத்தொடங்கியது. யாரோ டிஸ்சார்ஜ் ஆகி போகின்றார். ஒரு சிறு பெருமூச்சு அவளுக்கும் வெளிப்பட்டது.
திடீரென அவள் சேலைத் தலைப்பை யாரோ இழுப்பது போல் இருக்க திரும்பியவள் சந்தோஷத்தில் அதிர்ந்து தான் போனாள். வாசுதான்! கண்களில் ஆறுபோல் நீர் வழிய ஏக்கத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் சந்தோஷத்தில் டாக்டரை அழைக்க அவன் கையை அசைத்து அவளை அருகில் அழைத்தான்.
மெல்ல அவன் கையை பிடித்து அவள் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய புன்னகை செய்தனர்.
வாசுவின் குரல் தளுதளுத்தது. "சாவித்ரி, நீ என்னோட வாழ்க்கைல எல்லா துக்கத்திலும் கூடவே இருந்திருக்க. என்னோட பாக்டரி தீப்பிடிச்சி எரிஞ்சு சாம்பல் ஆனப்போ நீ மட்டும் தான் கூட இருந்த. என்னோட தொழில்ல நஷ்டம் ஏற்பட்டப்போ நீ மட்டும்தான் எனக்கு ஆறுதலா இருந்தே. என்னோட தொழில் போட்டியினால் என் எதிரி என்னை சுட்டபோதும் கூட இருந்தது நீதான். என் வீடு, கார், வசதி அனைத்தையும் இழந்தபோதும் கடைசி வரைக்கும் கூட இருந்த தேவதை நீ. கடைசியா என் உடல்நிலை மோசமானபோதும் உன்னைத்தவிர வேறு யாரும் என்னுடன் இல்லை."
சாவித்ரி "அதெல்லாம் எதுக்கு இப்போ, விடுங்க, இப்போ நீங்க மீண்டு வந்ததே போதும்" என்றபோது சந்தோசம் பொங்கியது அவளுக்கு.

"இல்லை சாவித்ரி விஷயம் இருக்கு, இவ்வளவு விசயமும் நடந்தது நீ கூட இருக்கும்போது தான், I think You are my bad luck. அதுனால என் பொண்டாட்டிக்கு போன் போட்டுக் கொடு. அவள்கிட்ட பேசி மன்னிப்பு கேக்கணும்" என்றான்.
டிஸ்கி: முதல் முயற்சி, கொஞ்சமா நக்கல் அடிங்கப்பா!
Labels:
சிறுகதை
Subscribe to:
Posts (Atom)
